வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

மும்பை ெசட்டா நகரில் உள்ள திருச்செம்பூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. பத்து வருடங்களுக்கு முன்னால், ஆடி வெள்ளிக்கிழமைக்காக  துர்க்கைக்கு புடவை, ரவிக்கை அளித்தோம். ஆனால், கோயில் அலுவலகத்தில் நிறைய புடவைகள் வந்துவிட்டன. அதனால், குறிப்பாக வெள்ளிக் கிழமைக்கு சாற்ற இயலாது. இரண்டு, மூன்று நாட்கள் ஆகலாம் என்றார்கள். என் கணவரும், நானும் ‘சரி’ என்று சொல்லி ரசீது பெற்றோம். ஆனால் எனக்குத்தான் மிகுந்த கவலையாகிவிட்டது. என் கணவர் மருந்து கம்பெனியில் வேலை பார்ப்பதால் ஒரு வாரம் வேலை விஷயமாக வெளியூருக்குச் சென்று விட்டார். நானும் இரண்டு நாட்கள் தொடர்ந்து கோயிலுக்குச் சென்று வந்தேன். அர்ச்சகரோ நீங்கள் அளித்த புடவையை சார்த்துகிறேன் என்றாரே தவிர தேதி குறிப்பிடவில்லை. நானும், கோச்சிங் கிளாசில் பாடம் சொல்லிக் கொடுப்பதாலும், என் மகன் பொறியியல் நுழைவுத்தேர்வு வகுப்புக்கு செல்வதாலும் நேரமின்மையால் மறந்துவிட்டோம். ஒரு வாரம் ஓடிவிட்டது. என் அலைபேசி (செல்போன்) ஒலித்தது. எங்கள் வகுப்பில் உள்ள மராத்தி ஆசிரியர்தான் போன் செய்தார். ‘‘உங்களுக்கு செட்டா நகரில் உள்ள முருகன் கோயில் தெரியுமா? அந்த முருகன் கோயிலின் பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் கவி சம்மேளம் நடக்கின்றது. நானும் பங்குகொள்கிறேன். நீங்கள் கட்டாயம் வரவேண்டும். நானே காரை ஓட்டி வருகிறேன். அதனால் உங்களுடன் சேர்த்து மூன்று டீச்சர்களையும் செட்டா நகர் கோயிலின் வாசலில் பிக் அப் செய்துகொள்கிறேன்’’ என்றார்.

‘‘எனக்கு ஓர் அளவுக்கு மராத்தி தெரியும். கவி சம்மேளம் கேட்கும் அளவுக்கு தேர்ச்சி இல்லை’’ என்றேன். அதெல்லாம் பரவாயில்லை. நான் ரெக்கார்ட் செய்து பின்பு அர்த்தம் சொல்கிறேன்’’. மராத்தி ஆசிரியரும் விடாமல், ‘‘நீங்கள் 6.30 மணிக்குள் செட்டா நகர் முருகன் கோயிலுக்கு கட்டாயம் வாருங்கள்’’ என்று அலைபேசியை வைத்து விட்டார். உடனே புறப்பட்டேன். கோயிலுக்குச் செல்லும் வழியில் பூ வாங்கிக்கொண்டேன். முருகன், ஐயப்பன், குருவாயூரப்பன், நவக்கிரகங்கள், சிவன் சந்நதிகளுக்குச் சென்று விட்டு துர்க்கை அம்மனை தரிசிக்க வந்தபோது கற்பூர ஆரத்தியைக் கண்டு மகிழ்ந்தேன். அர்ச்சகர், ‘‘வாங்கோ! வாங்கோ! ரசீது எங்கே! இப்போதுதான் நீங்கள் அளித்த புடவையை சாற்றி சந்நதியில் கற்பூர ஆரத்தி காண்பித்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள். அர்ச்சனை செய்யட்டுமா?’’ என்றார். மிகுந்த ஆனந்தத்தில், ‘‘இதே புடவையை எப்போது வரை சாற்றியிருப்பீர்கள். அவர்களும் (கணவரும், மகனும்) தரிசனத்திற்கு வரவேண்டுமே என்றேன். அர்ச்சகரும், ‘‘ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்குள் வந்துவிடுங்கள். அர்ச்சனையையும் அப்போது பண்ணலாம்’’, என்றார். என்னை வலுக்கட்டாயமாக அழைத்து துர்க்கை அம்மன் புதுப் புடவையில் காட்சியளித்தாள். என்னே அவள் கருணை! மீண்டும், என் கணவர், மகனுடன் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து நன்கு தரிசனம் செய்தோம். குடும்ப சகிதமாக கோயிலுக்குச் சென்று துர்க்கையை தரிசனம் செய்தது துர்க்கையின் அருளே!

- ரா. வைஜயந்தி, பாண்டூப், மும்பை.

Related Stories: