சென்னை: பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியான் ‘ஃபயர்’, 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது. பெரிய நட்சத்திரங்கள், இயக்குநர்களின் படங்களின் ஆயுட்காலமே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்கள் என ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் ‘ஃபயர்’ படத்தின் மாபெரும் வெற்றி ஜே.எஸ்.கே சதீஷ்குமார் மற்றும் படக்குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் ‘டிராகன்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன.
இந்நிலையில் பெரும்பாலும் புதுமுகங்கள் மற்றும் அறிமுக இயக்குனர் கூட்டணியில் உருவான ‘ஃபயர்’ இத்தகைய வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. இப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்திருப்பதோடு, பிரதான பாத்திரமொன்றில் ஜே.எஸ்.கே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கூறிய ஜேஎஸ்கே, ‘‘நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு ‘ஃபயர்’ வெற்றியே சாட்சி. தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்’’ என்றார்.