பாபாவின் கருணை! : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

கல்லும் கனியாகும், கற்சிலையும் பேசும்

சூதுவாது அற்ற சிறுவயதில் வெள்ளை உள்ளத்துடன் திருவிலஞ்சி குமரனை வணங்கி வந்தேன். அவனது அருளால் அதன் பலனாக அவனது ஊரிலேயே நில புலன் வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். ஒரு ரூபாய் கூட கையில் இல்லாத கஷ்டமான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, அவனை நினைத்து நடந்தே அவனது ஆலயத்தை நோக்கி சென்றேன். ஆலயத்தின் முன்பு இருக்கும் மண்டபத்தில் கண்களை மூடி அவனை நினைத்து படுத்து விட்டேன். சிறிது நேரம் கழித்து எழுந்திருந்து பார்த்தபோது நான் படுத்திருந்த எனது தலைமாட்டில் சில சில்லறை நாணயங்கள் கிடந்தது. அதை எடுத்து எனது பையில் போட்டுக் கொண்டு அவனது மகிமையை நினைத்து பரவசத்துடன் வீடு வந்து சேர்ந்தேன். கல்லும் கனியாகும். கற்சிலையும் பேசும். ஏன் அப்போது அப்படி நடந்தது என்பது இன்றுவரை எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது.

 - செ. முருகையா, இலஞ்சி.

ஆச்சரியமான தரிசனம்

நான் வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மை அலுவலராக பணி செய்து தற்போது ஓய்வில் உள்ளேன். வயல் வரப்புகளில் செல்லும்போது எனக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தது. நானும் என் மனைவியும் இருபது வருடத்திற்கு முன்பு திருவக்கரை என்ற ஊருக்கு சென்றோம். அங்கு வக்ரகாளியம்மன் கோயிலில் பௌர்ணமி அன்று இரவு தங்கி 12 மணி அளவில் தீப தரிசனம் கண்டோம். நான் கால் வலிக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். தரிசனம் முடித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டு ஊருக்கு திரும்பினோம். வீட்டின் படியை ஏறும்போது எனக்குக் கால்வலியே சுத்தமாக இல்லை. பிறகு, அடுத்த வருடம் வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டோம். மறு வருடமும் சென்றோம். இப்போது கால்வலி சுத்தமாகப் போய் விட்டது. இப்போது எனக்கு 75 வயதாகிறது. எனக்குள் இன்னும் அந்த ஆச்சரியமான தரிசனத்தை அவ்வப்போது நினைத்துக் கொண்டு வணங்குவேன்.

- A. மோகனம், வேலூர் - 632006.

அருள் கொடுத்த முத்துமாடன்

எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகா, மார்த்தாண்டன் பட்டி கிராமம். எங்கள் குலதெய்வம் ஸ்ரீபத்திரகாளி, ஸ்ரீமுத்துமாடன். உலகங்கும் கோவிட் 19 கொரோனா தொற்று நோய்காரணமாக எங்கும் திருவிழா நடக்கவில்லை. மேலும், தமிழக அரசு கிராமங்களில் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவித்திருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் மதுரையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு எனது தம்பி, அண்ணன் மகன், மருமகள் பேத்தி, பேரன் என இருசக்கர வாகனத்தில் சென்றோம். புதூர் வந்தவுடன் அங்கு இரவுப் பணி காவலர் எங்களை அனுமதிக்கவில்லை மறுபடியும் வேறு பாதையில் எட்டையாடிச் செல்லும் வழியில் சென்றோம். அங்கும் காவலர்கள் எங்களை விடவில்லை.  சிறிது நேரத்தில் மருமகளும், பேத்தியும் அழ அரம்பித்து விட்டார்கள். நாங்கள் மதுரைக்கு போகிறோம் என்று முடிவெடுத்தவுடனேயே, எதிர்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விஷயம் கேட்டோம். நேராகச் சென்றால் புதூர் போய் சேர்ந்து விடலாம் என்று கூறினார். எங்களுக்கு மிகவும் சந்தோஷமாகப் போனது. உடனே, புறப்பட்டு ஊர் போய் சேர்ந்தோம் . அங்கு சென்றவுடன் அங்கு கிராம அதிகாரிகள் எங்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கவில்லை. சிறிது நேரம் கழித்து எங்கள் நிலைமையைக் கூறி முறையிட்டோம். சாமி கும்பிட்டவுடன் கிராமத்தில் தங்கக் கூடாது என உத்தரவு கொடுத்தர்கள். நாங்கள் பக்கத்து ஊர்

குளத்தூரில் தங்கி மறுபடியும் ஊர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு மதுரைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

 - லிங்கமணி, மதுரை - 20.

பாபாவின் கருணை!

நான் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்தேன். அப்பொழுது காஞ்சிபுரத்தில் எங்கள் இல்லம் அருகே உள்ள சாய்பாபா கோயிலுக்கு பிரதி வியாழக்கிழமையில் விரதம் இருந்து மாலை கோயிலுக்கு செல்வேன். சில வருடங்களுக்கு பிறகு திருமணம் முடிந்து சென்னை பள்ளிக்கரனையில் என் கணவருடன் வசித்து வந்தேன். அவ்வூரில் சாய்பாபா கோயில் எங்கு உள்ளது என தெரியவில்லை. அங்கு சிவன் கோயில் உள்ளதை தெரிந்து கொண்டு வியாழக்கிழமை மாலை கோயிலுக்குச் சென்றேன். என்ன அதிசயம்! அக்கோயிலின் ஒரு பகுதியில் சாய்பாபா படம் வைத்து பஜனை பாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டவுடன் மெய் சிலிர்த்து சாய்பாபாவே நம்மை வரவழைத்தது போல் இருந்தது. இதன் பிறகு ஒவ்வொரு வியாழக் கிழமையும் விரதமிருந்து கோயிலுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது. இப்பொழுது ஆண் குழந்தை, பெண் குழந்தையோடு மகிழ்ச்சியோடு வாழ்கிறேன்.

 

 - P. சந்திரா, கீழ்பென்னாத்தூர் - 604601.

Related Stories:

>