வந்த வழி?

பிட்ஸ்

ராகவேந்திர சுவாமிகள் என்றதும்  மூலராமர் நினைவிற்கு வருவார்.  மூலராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது.  மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத்தான மூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.

மூலராமர் விக்ரகத்தை உருவாக்கியவர் பிரம்மதேவர். ஆம்! பிரம்மதேவர் தம் வழிபாட்டிற்காக  மூலராம விக்ரகத்தை உருவாக்கி வழிபட்டு வந்தார். அவர் அதை இஷ்வாகு மன்னரிடம் அளிக்க, இஷ்வாகு மன்னர் பரம்பரையினர் அதைத் தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள். வழிவழியாக வந்த அந்த விக்ரகம், தசரதர் பூஜையில் இடம் பெற்றது. குழந்தையில்லா குறை தீர, தசரதர் தினந்தோறும் வழிபட்டு வந்தார். அதன் பலனாக, தசரதருக்கு மகனாக ராமர்  அவதரித்தார்.

ராமர் அவதரிக்கக் காரணமான அந்த சுவாமி ‘ மூலராமர்’ என அழைக்கப்பட்டார்.  ராமர் பரம்பரையினர் பூஜித்து வந்த தெய்வவடிவம், கடைசியாக கலிங்க மன்னர் கஜபதி என்பவரிடம் வந்து சேர்ந்தது.இந்தத் தகவலை மத்வர் அறிந்தார்; உடனே, தன் சீடனான நரஹரியை அழைத்து, ‘‘நீ போய் கலிங்க மன்னரிடமிருந்து அந்த மூலராமத் திருமேனியைப் பெற்று வா!’’ எனக் கூறினார். அதை ஏற்றுப் புறப்பட்ட நரஹரி கலிங்க தேசத்தை அடைந்த நேரத்தில், கலிங்க மன்னர் இறந்துபோய் விட்டார். அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்க யானையின் துதிக்கையில் மாலையை அளித்து அனுப்பி இருந்தார்கள். மன்னரைத் தேர்ந்தெடுக்க மாலையுடன் வந்த யானை, அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நரஹரியின்

கழுத்தில் மாலையைப் போட்டது.

அப்புறம் என்ன? நரஹரி அரசராக ஆனார். அவர் அரசரானதும் முதல் வேலையாக, மூலராமர் திருவடிவைத் தானே கொண்டுபோய், குருநாதரான மத்வரிடம் சமர்ப்பித்தார். தன் கைகளில் சமர்ப்பிக்கப்பட்ட மூலராமரை, ஆர்வத்துடன் பெற்ற மத்வர் எண்பது நாட்கள் தாமே பூஜித்து, அதன்பின் தன் முதல் சீடரான பத்மநாப தீர்த்தரிடம் ஒப்படைத்தார்.

வழிவழியாக வந்த அந்த மூலராமரை, மத்வரின் ஞானப் பரம்பரையில் வந்த ராகவேந்திரர் பூஜித்தார். மூலராமர் வந்த வழியை விளக்கும் மூலநூலில், ‘இந்த விக்கிரகம் எங்குள்ளதோ, அங்கு அறம் - பொருள் - இன்பம் - வீடு எனும் நான்கும் எப்போதும் விளங்கும்’ என மத்வரே

கூறியிருக்கிறார்.சத்குருநாதர் சொற்படி செயல்படுபவர், உயர்நிலையை அடைவர் என்பதை விளக்கும் நிகழ்வு இது.

 - V.R. சுந்தரி

Related Stories: