மனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்

தைமாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம் ஆகும். இம்மாதத்தில் குமரன் இருக்கும் தலம்தோறும் விழாக்கள் வெகுசிறப்பாய் நடைபெறும். முருக பக்தர்கள்  மார்கழியில் விரதம் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருந்து முருகப்பெருமானின் திருவருளைப்பெற்றுச் சிறப்பர். முருகனின் கையில் இருக்கும் குன்றம்  தொலைத்த, குரைகடலில் சூர்தடிந்த வேலின் பெருமையினைப் போற்றலும் அதனை நினைத்துத் துதித்தலும் சிறப்புடையதாகும். முருகப் பெருமானின் திருக்கை  வேலின் புகழ் கூறுவதை அடிப்படையாக வைத்து அருணகிரிநாதர் பாடியது வேல் விருத்தம் ஆகும். இது விநாயகர் காப்பு ஒன்றும், 11 ஆசிரிய விருத்தங்களும்  கொண்டமைந்தது. இது பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் 10 கொண்டு அமைக்கப்பட்டது. அதனை இங்கு வாயினால் பாடி மனதினால் சிந்திப்போம்.

விநாயகன் போற்றும் நாயகன் கைவேல்:

ஒரு காலத்தில் ஆதிசேடனின் ஆயிரம் முடிகளின் மேல், சந்திரனின் ஒளியும் சூரியனின் ஒளியும் சேர்ந்து தாக்கத் தொடங்கின. அதனால் மேகங்களின் உட்பாகம்  சுழற்சி அடைந்தன. தேவர்கள் அசுரர்களால் பெற்ற துன்பம் நீங்கியது. மலைக்குறப் பெண்கள் மலைகளின் சிகரங்களிலும், வீடுகளிலும், முச்சந்திகளிலும்  செழுமையான நெல் தானியங்களுடன் முத்துக்களையும் உரலில் இட்டு மகிழ்வோடு குற்றினர். இந்தப் பரந்த உலகில் முதன்மைத் தன்மை கொண்ட கங்கை  முதலாகிய நதிகள் எல்லாம் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கின. இத்தகைய நல்ல நிகழ்வுகள் எல்லாம் தோன்றச் செய்து, கடல் வற்றி மண் திடலாக  மாறும் வண்ணம் அதன் நீரை எல்லாம் உண்டது வேலாயுதம்.

அத்தகைய வேலாயுதம் மதநீர் தோன்றும், கபோலத்தையும் உறுதியான தந்தத்தையும் பெரிய இரண்டு காதுகளையும் நெற்றிக் கண்ணையும் கொண்ட விநாயகப்  பெருமான் தம்பியாகிய முருகனின் கையில் இருக்கும் பெருமையினை உடையது ஆகும். தேவர்களால் வளர்க்கப்பட்ட குயில் போலும் குரலுடைய தேவசேனை,  குகைகள் நிறைந்த மலையில் வசிக்கும் வேடர் குலப்பெண் மயில் போலும் வள்ளிப் பிராட்டி, ஆகிய இரு பெண்களுடன் மகிழ்ந்துறையும் பால சுப்ரமணியன்,  சண்முகன் என்னும் திருப்பெயர்களை உடைய முருகப் பெருமானை, எதிர்த்து வந்த அரக்கர்களின் சேனைகளைச் சிதறிப் போகும்படி செய்த வீரத்தினை  உடையதும் அவ்வேலே ஆகும்.

கொற்றவை சிறுவனின் திருக்கைவேல்
:

ஒரு காலத்தில் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் சூலாயுதமும், திருமாலின் வெற்றிச் சின்னமான ஒளி வீசுகின்ற சக்ராயுதமும், தேவர்களின்  தலைவனான இந்திரனின் வஜ்ராயுதமும், சூரனையும் அவனுடைய அரக்கர் படையினையும் அழிக்கும் ஆற்றல் உடையன அல்ல எனக் கருதிய தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று சிறந்த போர் வீரனே! நீ வெற்றி பெற்று எங்களுக்கு அருள வேண்டும்! என வேண்டி நின்றனர். அவர்களின் மேல் கருணை கொண்டு  கிரவுஞ்ச மலையையும் சூரபத்மாவின் உடலையும் ஒரே நிமிடத்தில் உருவி அழித்து வெளி வந்த ஒப்பற்ற ஆண்மை கொண்ட நெடிய படை வேலாயுதம் ஆகும்.

 

அத்தகைய வேலானது ஊழிகாலத்தில் தேவர்கள் முக்தி அடையும் பொருட்டு தேவர்களின் எலும்புக் கூட்டை மாலையாக போட்டுக் கொண்டவளும்  மகிஷாசுரனைக் கொன்று அவனின் எருமைத் தலைமேல் நிற்பவளும், சப்த மாதர்களில் ஒருவளான வராக மூர்த்தியின் சக்தியாக இருப்பவளும் இந்திரனின்  சக்தியானவளும் குமாரமூர்த்தியின் சக்தியானவளும் தாமரையை ஆசனமாகக் கொண்டிருக்கும் இளமை மாறாத கன்னியாகவும் காக்கும் சக்தியாகிய  விஷ்ணுரூபிணியாகவும் மும்மூர்த்திகளுக்கும் மேலானவளாகவும் பைரவரின் சக்தியாகவும் குற்றம் அற்றவளாகவும் பொன்னிறமானவளாகவும் அடியார்களின்  விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவளாகவும் சிவனுடைய தேவியாகிய பேரழகியாகவும் நீல நிறத்தவளாகவும் சம்சாரக் கடலை  அகற்றுபவளாகவும் கார்த்திகை மாதர்களாக வருபவளாகவும் யுத்தகளத்திற்கு அதிபதியாகவும் முக்கண்ணுடையவள் ஆகிய தேவியாகவும் விளங்கும்  உமையம்பிகை பெற்றருளிய உலகுக்கெல்லாம் முக்திச் செல்வத்தை கொடுக்கும் கந்த பிரானின் திருக்கையில் விளங்கும் பொன்னொளி வீசும் அழகிய வேலாகும்.

தேவர்கள் போற்றி வணங்கும் தீரவேல்:

பந்து, கழச்சிக் காய், ஊஞ்சல், கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் தங்களின் பகைவர்களான அசுரர்களின் வீரத்தையும் அடக்கி, தேவர்களுக்கு மீண்டும்  அரசாட்சியைக் கொடுத்ததைப் புகழ்ந்து, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவ மாதர்களும், இந்திராணி போன்றோரும் முருகப்பெருமானின்  அன்னையர்களாகிய கௌரி, கங்கை, கார்த்திகைமார்கள் போன்றோரும் பாடி நடனம் ஆடும் கீர்த்தியையும், சிறப்பையும் கொண்டது கூரிய வேல் ஆகும்.

தேவ மாதர்கள் போற்றும் சிறப்புடைய வேலானது கங்கையை முடியில் தரித்திருக்கும் சிவ பெருமானுக்கே பிரணவ உபதேசம் செய்தவனும் சேவற் கொடியை  உயர்த்தி பிடித்திருப்பவனும், பூங்கொத்துக்கள் நிறைந்த கடம்ப மாலையையும் இருவாச்சி மாலையையும், நீலோர்பலம் காந்தள் பூவையும், நீலச் சங்கு  புஷ்பத்தையும், மாலையாகத் தொடுத்து அணிந்திருக்கும் திருமார்பினை உடையவனுமாகிய முருகப் பெருமானின், அழகியத் திருக்கரத்தில் வீற்றிருக்கும்  பெருமையைத் தன்னகத்தே கொண்டமைந்ததாகும்.

மேலும் கௌமோதகி என்கிற கதை, சார்ங்கம் என்கிற வில், சுதர்சனச் சக்கரம், பாஞ்சசன்யம் என்கிற சங்கு, நாந்தகம் என்கிற வாள் ஆகிய பஞ்ச ஆயுதங்களைக்  கொண்டவனும் அசுரர்களுக்கு எமன் போன்றவனும், மாயாரூபனும், நெருப்பைப்போல் எரியும் கண்கள், வளைந்த கோடுகள், பருத்த உடல், ஆயிரம் தலைமுடிகள்  கொண்ட ஆதிசேடனின் பொன்நிறமான, படுக்கையின் மேல், செந்தாமரையில் வாசம் செய்யும் திருமகளும், நிலமகளும், தன் திருப்பாதங்களை வருடிக் கொடுக்க,  தாமரை போன்ற அழகான கண்களை மூடிக் கொண்டு தூங்குகின்ற, மஹாவிஷ்ணுவின் மருமகனாகிய முருகப்பெருமானின் வெற்றியையுடைய வேலாயுதமே  ஆகும்.

வலாசுரனின் பகைவனாகிய இந்திரனின், துன்பங்களும், மன வருத்தங்களும், நீங்கும்படியும், மேக வண்ணனாகிய திருமாலும், அறியப்பட்ட நான்கு வேத  சாஸ்திரங்களையும், ஓத வல்ல பிரம்மனும், அழிவு இல்லாதவனும், மேரு மலையை வில்லாக வளைத்தவனுமாகிய சிவபெருமானுமாகிய இவர்களின், மனம்  அமைதி அடைந்து மகிழ்ச்சி அடையும் வண்ணம் இவ்வுலகத்தில் உள்ள உயிர்களும் நீரில் வாழும் உயிரினங்களும் அழிந்து போகும்படி, போரிட்ட அசுரர்கள்  வாழும் உலகங்களிலெல்லாம், நெருப்பு, பரவும்படி உலாவி கொடியவர்களை வேரறுத்ததும் முருகன் கை வெற்றிவேலே ஆகும்.

நக்கீரன் போற்றிய வேல்:

மா மரமாய் மாறின சூரபத்மனை அழித்து, குளிர்ந்த ஏழு மலைகளையும் ஊடுருவிச் சென்று அந்த மலைகளில் வசித்த அசுரர்களின் வலிய மார்பினை, பிளந்து  அப்புறமாகச் சென்றது வேல். பிரமன் பிரணவப் பொருளை தெரியாமல் இருந்த குற்றத்திற்காக சிறையில் அடைத்ததும் வேல். நூறு அசுவமேத யாகம் செய்த  இந்திரனை, சூர பத்மன் அடைத்த சிறையினின்றும் விடுவித்ததும் வேல். யாகங்கள் செய்யும் முனிவர்களின் வாழ்த்து பெற்றதும் சொர்க்கத்தில் தேவர்களால்  செய்யப்பட்ட துதிகளைப் பெற்றதும் வேல். தமிழ்ப் புலமை கொண்ட நக்கீரரின் துதிப் பாடல்களைப் பெற்று, இந்த உலகங்களில் யாருக்குமே இல்லாத வகையில்  கீர்த்தியைப் பெற்றதும் கூரிய வேலாயுதமே ஆகும்.

மாமுதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய்

வலிய தானவர் மார்பிடம்

வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு

மகவான் தனை சிறைவிடுத்து

ஓம இருடி தலைவர் ஆசிபெற்று உயர்வானில்

உம்பர் சொல் துதி பெற்று நா

உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில்

ஒப்புஇல் புகழ் பெற்ற வை வேல்

சோம கலச ப்ரபா அலங்கார தர ஜடா

சூடி காலா அந்த காலர்

துங்க ரஷக த்ரோண கட்க குலிசம் சூலம்

துரக கேசம் அம்பரம்

சேம வடவாம் அம்புயம் பரண சங்கு ஆபரண

திகம்பர த்ரியம்பக மகா

தேவ நந்தன கஜானன சகோதர குகன்

செம்பொன் திருக்கை வேலே

வேல் உறையும் இடங்கள்:

முருகப்பெருமானின் பூத கணங்களும் வேதாள கணங்களும் மகிழும் வண்ணம் அரக்கர்களை அழித்தொழித்த வேலானது பழநி மலை, பழமுதிர்ச்சோலை,  திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருவிடைக்கழி, திருவாவினன் குடி, பெரிய கடல் சூழ்ந்த இலங்கைத் தீவில் உள்ள கதிர்காமம் போன்ற  தலங்களில் விரும்பித் துதிக்கின்ற அடியார்களின், நாவிலும், சிந்தையிலும் வீற்றிருக்கும் சிறப்பினை உடையது ஆகும். வேலானது ஆயிரம் கோடி சூரியர்கள்  போலவும், ஆயிரம் கோடி சந்திரர்கள் போலவும் ஒளிப்பிரகாசம் கொண்டமைந்தது. அத்தகைய வேல் வந்த வேகத்தினால் தேவலோகம் சுழற்சி அடைந்தது. எட்டு  திசைகளும் நிலை தடுமாறிச் சுற்றின. அக்னி தேவனும் சுற்ற அலை வீசும் கடல் கொதிப்படைந்து கொந்தளித்தது. அசுரர்களின் உயிர்கள் தமக்கு முடிவு காலம்  வந்து விட்டதே என எண்ணி பதட்டத்தினால் சுற்றின. எல்லா பிரபஞ்சமும் சுழன்றது.

அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல

அங்கியும் உடன் சுழலவே

அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல

அகில தலமும் சுழலவே

மண்டலம் நிறைந்த ரவி சதகோடி மதி உதிர

மாணப் பிறங்கி அணியும்

மணி ஒலியினிற் சகல தலமும் மருளச் சிரம

வகை வகையினில்; சுழலும் வேல்

தண்டம் உடனும் கொடிய பாசம் உடனும் கரிய

சந்தம் உடனும் பிறைகள்போல்

தந்தமுடனும் தழலும் வெங்கண் உடனும் பகடு

தன்புறம் வரும் சமனை யான்

கண்டு குலையும் பொழுதில் அஞ்சல் என மென்சரண

கஞ்சம் உதவும் கருணைவேள்

கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி

கணவன் அடல் கொண்ட வேலே

வேலால் விளையும் மேன்மைகள்:

இத்தகைய மேன்மைகளை உடைய வேலானது தண்டாயுதத்துடனும், பாசக் கயிற்றுடனும் சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும், தீப் போலும்  கண்களுடனும், எருமைக் கடாவில் வரும் எமனை கண்டு மனிதர்கள் அச்சப்பட்டு நடுங்கும் போது, பயப்படாதே! எனத் தன் திருவடித் தாமரையை தந்தருளும்  கருணாமூர்த்தி, கந்தப் பெருமான், முருகப் பெருமான், குகப் பெருமான் வள்ளியின் மணாளன் என்னும் சிறப்புகளை உடைய முருகப்பெருமானின் வேலாயுதமே  ஆகும். முருகப்பெருமானின் வேலாயுதமானது பகைவர்களாகிய அரக்கர்களுக்கு ஆலகால விஷத்தைப் போல் நின்று அவர்களை அழிக்கும் ஆற்றலுடையது.

தேவர்களுக்கு அமிர்தம் போல் புத்துயிர் கொடுத்துக் காத்து நிற்பது. முனிவர்களுக்கு சந்திரனின் குளிர்ச்சியைப்போல் அவர்களின் தவ வெப்பத்தை  சமப்படுத்துவதாய் அமைந்து அருளுவது. தன்னைத் துதிக்கும் அடியவர்களுக்கு, எப்பொழுதும் முற்றுப் பெறாத வகையில் மீண்டும் மீண்டும் கிளம்பி எழும்  அகப்பகை, புறப்பகை இரண்டையும் அடியோடு ஒழித்து, தேவர்களுக்குக்கூட கிடைப்பதற்கு அரிய அழிவில்லாத பேரின்பமாகிய சாயுச்ய பதவியைக் கொடுத்து  அருள் செய்யும் ஆற்றல் உடையது ஆகும்.

வேலும் மயிலும் துணை:

கோமேதகம், நீலம், பவளம், மாணிக்கம், மரகதம், முத்து, புஷ்பராகம், வைடூரியம், வைரம் என்கிற நவ ரத்தினங்களை, தனக்குள்ளே கொண்டது போல்  பிரகாசிக்கும், சிவந்த கிரணங்களை உடைய சூரியனை மறைக்கும் ஆற்றலைத் தந்தருள வேண்டும் என மேகங்கள் வேலாயுதத்தினை வணங்குகின்றன. முன்பு  சூரசம்காரத்தின் போது கடலினை வற்றச் செய்தது போல் இப்பொழுது எங்களை வற்றச் செய்து விடாதே எனக் கடல்கள் வந்து வேலாயுதத்திடம் வேண்டி  நிற்கின்றன. முன்பு அசுரர்களிடையேயான போரில் கிரௌஞ்ச மலையினை அழித்தது போல் இப்பொழுது எங்களை அழித்து விடாதே என்று மலைகள் வந்து  வேலாயுதத்தை வணங்கி நிற்கின்றன.

இத்தகைய சிறப்பினை உடைய வேலின் பெருமையினை விளக்கும் அருணகிரிநாதர் பாடலின் பின் பகுதியில் மயிலின் சிறப்பினையும் விளக்குகிறார்.  மயிலானது, வாயில் உள்ள பற்களில், கொடிய நெருப்பை வீசுவதும் நெருப்புக் கண்களைக் கொண்டதுமான பெரிய ஆதிசேஷனை, மலை உச்சியில், தாவி மிதித்து,  நடன தாளங்களுடன் நடிப்பினை செய்யும் வல்லமை கொண்டது என்கிறார். இது சுழுமுனையாகிய மலையின் உச்சியில் குண்டலினியாகிய சர்ப்பத்தை அடக்கி  மகாமாயையாகிய விந்துவான மயில் பரமானந்தம் ஆடுகிறது எனகிற தத்துவத்தை விளக்கி நிற்கிறது. மயில்வாகனக் கடவுள், தேவர்கள் வணங்கும் தலைவன்  ஆகிய ஆறுமுகப் பெருமானின் திருக் கரத்தில் விளங்கும் வேலாயுதத்தின் பெருமையை விளக்கும் அத்தகைய பாடல்,

தேடுதற் அரிதான நவமணி அழுத்தியிடு

செங்கரனை அமுதம் வாய்கொள்

செயம் அளித்து அருள் எனக்கு என உவப்பொடு வந்து

சேவடி பிடித்தது எனவும்

நீடு மை கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும்

நீ எமைக் காக்க எனவும்

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்

நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடும ஐ கணபணக் கதிர்முடி புடை எயிற்று

அடல் எரி கொடிய உக்ர

அழல் விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்கு

அரசினைத் தனியெடுத்தே

சாடுமைப் புயல் எனப் பசுநிறச் சிகரியில்

தாய் திமித் துட நடிக்கும்

சமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்

சண்முகன் தன்கை வேலே

என்பதாகும். இவ்லாறு வேலின் பெருமை சொன்ன பாடல் மயிலின் பெருமையையும் பேசுகிறது. எனவே தமிழ்வல்ல அருணகிரியார் பாடியருளிய வேல்விருத்தம்  சொல்லி மனத்தால் முருகப்பெருமானையும் அவன் திருக்கை வேலினையும் வணங்கி மனத்தின் துயர் நீங்கி இன்புற்று வாழ்வோமாக!!

முனைவர் மா.சிதம்பரம்

Related Stories: