நம்பிக்கையை மனதில் வைத்தால் நலமுடன் வாழலாம்

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

Advertising
Advertising

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?என் மகள் இன்ஜினியரிங் முடித்த நிலையில் மேற்கொண்டு ஐஏஎஸ் படிக்க விரும்புகிறாள். சென்னை சென்றுதான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அங்கு அனுப்பி படிக்க வைப்பதா அல்லது இங்கேயே ஏதேனும் வேலை தேடலாமா? தாங்கள் கூறுவதை வைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும். உரிய வழி காட்டுங்கள்.

- பேபி, சேலம்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசை முடிவுறும் தருவாயில் உள்ளது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சூரியன்- குரு - கேது ஆகியோரின் இணைவு சிறப்பான நிலையைத் தருகிறது. ஜீவன ஸ்தானாதிபதி சனி 11ம் வீட்டில் செவ்வாய் மற்றும் புதனுடன் இணைந்திருப்பதும் நல்ல நிலையே. அவரது விருப்பப்படி அவர் ஐஏஎஸ்  தேர்வினை எழுதலாம். அரசுத்துறையில் உயரதிகாரியாக பணி செய்யும் அம்சம் நன்றாக உள்ளது. என்றாலும் 24.06.2019 முதல் துவங்க உள்ள சந்திர தசை அவரது மனநிலையில் லேசான குழப்பத்தினை உண்டாக்கும். சென்னைக்கு அவர் பயிற்சி பெற வருவதில் தவறில்லை. ஆனால் ஹாஸ்டல் போன்ற இடங்களில் அவரைத் தனியாக தங்க வைப்பது நல்லதில்லை. அவருடைய மனநிலையை கருத்தில் கொண்டு பெரியவர்கள் யாராவது அவருடன் வந்து தங்கியிருப்பது நன்மை தரும். திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் அருகில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். உங்கள் மகளின் வளமான வாழ்விற்கு வழி பிறக்கும்.

?எனக்குத் திருமணம் ஆன நாளில் இருந்து ஒரே பிரச்னைதான். எனது கணவருக்கு நிரந்தர வேலையில்லை. எனது மகன் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். எனக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் உள்ளது. எனது வயதான காலம் குறித்து கவலையாக உள்ளது. பெரிய வியாதி ஏதாவது வர வாய்ப்புள்ளதா? என் ஜாதகப்படி நிம்மதியும் சந்தோஷமும் உண்டா? நல்ல பதில் சொல்லுங்கள்.

- லலிதா, சென்னை.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அநாவசியமான மனக்குழப்பத்தில் உள்ளீர்கள் என்பதை உங்கள் கடிதம் எடுத்துரைக்கிறது. உங்களை விட பிரச்னையில் சிக்கித் தவிப்போர் இந்த உலகத்தில் ஏராளம். நம்மை ஆண்டவன் நல்லபடியாகத்தான் வைத்திருக்கிறான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். மறுபிறவி குறித்து உங்கள் கடிதத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். இந்தப் பிறவியில் நமது கடமையைச் சரிவர செய்து முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து வரும் நேரம் சுமாராக இருந்தாலும் 29.01.2020 முதல் நல்ல நேரம் என்பது துவங்குகிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனுக்கு நிச்சயமாக வெகுவிரைவில் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும். உங்கள் ஜாதகத்தில் ரோக ஸ்தானத்தில் குரு - சுக்கிரனின் இணைவினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஜென்ம லக்னத்தின் மீது விழும் சூரியனின் நேரடிப் பார்வை உங்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்கும். தினமும் காலையில் சூரிய உதய நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து அரை மணி நேரத்திற்கு தியானத்தில் ஈடுபடுங்கள். சூரிய ஒளியின் மகிமையால் உங்கள் உடல் ஆரோக்யம் பெறும். தேவையற்ற குழப்பங்களுக்கு மனதில் இடமளிக்காமல் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நலமுடன் வாழ்வீர்கள்.

?என் மகளின் ஜாதகத்தில் சிலர் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். வேறு சில ஜோதிடர்கள் நாக தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள். இரண்டு தோஷங்களும் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. சிலர் சுத்த ஜாதகம் என்கிறார்கள். என் மகளின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா, பரிகாரம் என்ன, அவருடைய திருமணம் எப்போது நடைபெறும்?

- மாரியப்பன், மதுரை.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் செவ்வாய் 12ம் வீட்டில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் சூரியனின் நேரடிப் பார்வைக்குக் கீழ் வருவதால் செவ்வாய் தோஷம் என்பது கிடையாது. அதே போல இரண்டு மற்றும் எட்டாம் வீடுகளில் முறையே கேதுவும் ராகுவும் அமர்ந்திருந்தாலும் உச்சம் பெற்ற குருவின் இணைவு உள்ளதால் நாகதோஷம் என்பதும் இவரது ஜாதகத்தில் இடம்பெறவில்லை. உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து கொண்டிருப்பது திருமண ரீதியாக நல்ல நேரமே. ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஒரு சில தடைகள் இருந்து வந்தாலும் அவற்றை எளிதாகக் கடந்து மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த இயலும். மகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஜோதிடராகப் பார்த்துக் கொண்டிருக்காமல் மாப்பிள்ளை தேடுவதில் கவனம் செலுத்துங்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் நீங்களாக மகளின் ஜாதகத்தில் அந்த தோஷம் உள்ளது, இந்த தோஷம் உள்ளது என்று சொல்லாதீர்கள். உங்கள் மகளின் ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் கிடையாது. ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி தாமதமான திருமண யோகத்தைத் தந்திருக்கிறார், அவ்வளவுதான். அவரது ஜாதகக் கணக்கின்படி 17.11.2019ற்குப் பின் திருமணம் நடந்து விடும். சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்து அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். மனதிற்கு பிடித்த மணவாழ்வு அமைந்துவிடும்.

?பூர்வீக இடத்தில் நான், என் அண்ணன், என் தங்கை மூவரும் தனித்தனியான வீடுகள் கட்டி கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தோம். தற்போது என் தாய் மற்றும் உடன்பிறந்தோருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு சொந்த வீட்டிலிருந்து வெளியேறி வாடகை வீட்டில் வசிக்கும் சூழ்நிலை உண்டாகி இருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பகை விரிசல் நீங்குமா? தங்கள் ஆலோசனை தேவை.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

அருகருகே உறவினர்கள் குடியிருக்கும்போது இது போன்ற பிரச்னைகள் வருவது சகஜம்தான். அதிலும் உடன்பிறந்தோர் எனும்போது அங்கே உரிமை என்பது அதிகமாகிறது. உரிமையானவர்கள் என்பதால் சற்று கடுமையாக நடந்து கொள்கிறார்கள். என்றாலும் அவர்களும் நம் நலனை விரும்பியே அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்காலம் சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. தற்கால கிரஹ நிலையின்படி நீங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவது நல்லதே. இது தற்காலிகமான பிரிவுதானே அன்றி நிரந்தரமல்ல. கடகராசியில் பிறந்திருக்கும் நீங்கள் சென்ட்டிமென்ட் உணர்வு அதிகம் கொண்டவர். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடைய எண்ணம் உடன்பிறந்தோரையும், பெற்ற தாயாரையுமே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கும். கால ஓட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும். தனியாக மற்றொரு வீட்டினைக் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஜாதக கணிப்பின்படி 10.02.2021ற்குப் பின் குடும்பத்தில் உள்ள பகை விரிசல் காணாமல் போய்விடும். உடன்பிறந்தோருடன் மீண்டும் இணைந்து வாழ்வீர்கள். திங்கட்கிழமை தோறும் அருகில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உங்கள் பிரார்த்தனைகளை முன் வையுங்கள். கர்த்தரின் அருளால் உங்கள் மனக்கலக்கம் காணாமல் போகும்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

தினகரன்

ஆன்மிக மலா்

229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,

ராசியை குறிப்பிடவும்.

Related Stories: