மிமிக்ரி கலைஞராகவும், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்த சிவகார்த்திகேயன், பிறகு ஹீரோவாக நடித்தார். இன்று வெளியாகியுள்ள ‘பராசக்தி’, அவரது நடிப்பில் உருவான 25வது படமாகும். இந்நிலையில் அவரிடம், ‘35 படங்களில் ஹீரோவாக நடித்த ரவி மோகன், உங்கள் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார். அதுபோல், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திலோ அல்லது வேறு படத்திலோ உங்களை வில்லனாக நடிக்க கேட்டால், அந்த வாய்ப்பை நீங்கள் ஏற்பீர்களா?’ என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘நான் ஹீரோ என்றாலும், பலமான வில்லன் கேரக்டரில் நடித்துள்ள ரவி மோகன்தான் படம் முழுக்க வந்து அசத்தியிருப்பார். அதுபோல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் எனக்கு கிடைத்தால், அதன் வீரியத்தை பொறுத்து கண்டிப்பாக வில்லனாக நடிப்பேன். ஆனால், இப்போது நான் ஹீரோவாக நடிப்தற்கு முக்கிய காரணமே நாலுபேர் நல்லவிதமாக என்னை பாராட்ட மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம்தான். கெட்ட வில்லனாக நடித்து, எல்லோரும் என்னை திட்டும்படியான ஒரு கேரக்டரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். காமெடி வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தால், அதுவும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போல், யாரும் வெறுக்காத வில்லன் கேரக்டர் என்றால் கண்டிப்பாக நடிப்பேன்’ என்றார்.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் டிராவல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அவரது நடிப்பில் ‘டான்’ என்ற படத்தை இயக்கியிருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதை முடித்துவிட்டு சிவகார்த்திகேயனை அவர் இயக்குகிறார். அதற்கான கதை தயாராக இருக்கிறது. மற்றபடி துபாயில் இரண்டு பிளாட்டுகள் வாங்கியது குறித்து கேட்டபோது சிரித்த சிவகார்த்திகேயன், ‘முடிந்தால் அந்த பிளாட்டுகளின் அட்ரஸை எனக்கு கொடுங்கள். அதில் குடியேற எனக்கு வசதியாக இருக்கும்’ என்றார். அடுத்து அவரது தயாரிப்பில் ராதிகா நடித்த ‘தாய்கிழவி’ என்ற படம் திரைக்கு வருகிறது.
