சென்னை, டிச.13: உலக அளவில் கேரம் போட்டிகளில் சாதித்தவர், வடசென்னையைச் சேர்ந்த காசிமா. ஆட்டோ டிரைவரின் மகளான காசிமா, அமெரிக்காவில் நடந்த 6-வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலகறிய செய்தார். கேரம் விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்திட்ட காசிமாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இந்த படத்துக்கு ‘தி கேரம் குயின்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாகேஷ் பாட்டில் தயாரித்து, முரளி இயக்கும் இப்படத்தில் காசிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். சென்னையில் நடந்த படவிழாவில் காசிமா பங்கேற்று பேசும்போது, ‘‘எனது இந்த நிலைக்கு பெற்றோர்தான் காரணம். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றிபெற முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும்’’ என்றார்.
