சென்னை: ராமின் ‘தங்க மீன்கள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை லிசி ஆண்டனி. 15 ஆண்டுகள் சினிமா துறையில் நிறைவு செய்திருக்கும் இவர், 75 படங்களில் நடித்துவிட்டார். அவர் கூறியது: திரையில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும் படங்களில் என் நடிப்பு வெகுவாக பேசப்படுகிறது. அந்தவகையில் ‘குற்றம் புரிந்தவன்’ வெப்சீரிஸ், ‘குயிலி’ படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. 15 வருட திரை வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்களை சந்தித்து விட்டேன். என்னை பொறுத்தவரை கடின உழைப்பும், விடாமுயற்சியும், பொறுமையும் தான் வெற்றிக்கு அடித்தளம். அதை உறுதியாக நம்புகிறேன்.
அதன் அடிப்படையில்தான் என் பயணமும் இருந்து வருகிறது. ஓடிடி, சினிமா என இரண்டையும் பிரித்து பார்க்கவில்லை. இரண்டுமே நமது திறமைக்கு ஓர் அடித்தளமாக இருக்கிறது. சினிமாவில் நடிக்கும்போது 2 மணி நேரத்துக்குள் ஒரு கதையை சொல்வதால் அதில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும்போது, எனக்கான பகுதி குறையலாம். அதே சமயம், ஓடிடியில் எனக்கான இடம் அதிகமாக இருக்கலாம். இது மட்டும்தான் வித்தியாசம். மற்றபடி இரண்டுமே என்னை மக்கள் வரை சேர்த்திருக்கிறது. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், நடிப்பு பற்றியும் தெரியாமல்தான் நடிக்க வந்தேன். என்னை நடிகையாக மாற்றியது எனது குரு இயக்குனர் ராம்தான்.
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், செல்ல அய்யாவு போன்ற நல்ல இயக்குனர்களுடன் பணியாற்றியதால் நல்ல படங்களில் நல்ல வேடங்களில் நடிக்க முடிந்தது. நான் நடித்தது பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்ததற்கு எனது இயக்குனர்களே காரணம். இப்போது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’, விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறேன்.
