சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டி யன், சரத்குமார் நடித்துள்ள படம், ‘கொம்புசீவி’. இதில் தார்னிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார். கடந்த 1992ல் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த ‘வில்லுபாட்டுக்காரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர், குரூப் டான்ஸர் ராணி. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘நாட்டாமை’ என்ற படத்தில் டீச்சராகவும், சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ என்ற படத்தில் ‘ஓ போடு’ என்ற பாடல் காட்சியிலும் நடித்திருந்த ராணியின் மகள்தான், தார்னிகா.
‘கொம்புசீவி’ படம் பற்றி பொன்ராம் கூறியதாவது:
வைகை அணை கட்டுமான பணியில், அப்பகுதியில் இருந்த 12 கிராமங்களும் நீரில் மூழ்கிவிட்டன. அதுவரை அங்கு வசித்த மக்கள் என்ன ஆனார்கள் என்பது கதை. கொம்புசீவி விடுதல் என்ற வார்த்தையை ஃபேமிலி முதல் அரசியல் வரை பயன்படுத்துகிறோம். ஹீரோவை உணர்வுகளால் தூண்டி பட்டை தீட்டப்படுவது திரைக்கதை. விஜயகாந்தின் நண்பர் சரத்குமார், இதில் ஒரு வலுவான கேரக்டரில் நடித்து, குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையில் சண்முக பாண்டியன் கேரக்டருக்கு உதவுகிறார். சண்டைக்காட்சியில் தனது அப்பாவை போல் சண்முக பாண்டியன் நடித்து அசத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக தார்னிகா நடித்துள்ளார்.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவரும், இளையராஜாவும் சேர்ந்து பாடியுள்ளனர். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது.
