அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

76. விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)

Advertising
Advertising

கம்சனைக் கண்ணன் வதைத்ததால், கம்சனின் மாமனாரான ஜராசந்தன் கண்ணன் மேல் கடும் கோபம் கொண்டான். கண்ணன் வாழும் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்துத் தோல்வி அடைந்த ஜராசந்தன், தென்கிழக்குத் திசையிலிருந்து பதினெட்டாவது முறையாகத் தாக்க வந்தான். காலயவனன் என்ற யவன மன்னனைத் துணைக்கு அழைத்துக் கொண்டான். யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது என அவனது தந்தைக்குப் பரமசிவன் வரம் அளித்திருந்தார். அதனால் யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை வெற்றி கொள்ளவே முடியாது எனக்கனவு கண்டான் ஜராசந்தன்.

காலயவனனும் ஜராசந்தனின் அறிவுரைக்கேற்ப வடமேற்குத் திசையிலிருந்து மதுராவைத் தாக்க வந்தான். இவர்களிடமிருந்து மதுராவையும் அதில் வாழும் மக்களையும் காப்பதற்காக, நகரையே மேற்குக் கடற்கரையிலுள்ள துவாரகை என்னும் புதிய பகுதிக்கு கண்ணன் மாற்றிய வரலாற்றை ‘மநு:’ என்ற 51-வது திருநாம விளக்கத்தில் பார்த்தோம். மக்களைப் பாதுகாப்பாக துவாரகைக்கு மாற்றிவிட்டு, மதுராவில் இருந்த தன் கோட்டையின் மேற்கு வாயிலிலிருந்து சாதாரண ஆடை மற்றும் தாமரைப்பூ மாலை அணிந்தபடி கண்ணன் வெளியே வந்தான். அதேநேரம் மதுராவின் மேற்கு வாசலை உடைத்துக் கொண்டு

காலயவனனின் சேனை நுழைந்தது.

ஆனால் நகரமே காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் காலயவனன். அப்போது கண்ணன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு ஆனந்தமாக எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டான். “ஏய், கிருஷ்ணா! நான் தான் காலயவனன். போர் புரிந்து உன்னை வீழ்த்துவதற்காக வந்துள்ளேன், வா, என்னுடன் போர் புரிய வா!” என்றழைத்தான். அவனைக் கண்டதும் கண்ணன் வேகமாக மதுராவை விட்டு ஓடத் தொடங்கினான். “ஏய் மாடு மேய்க்கும் கோழையே! போருக்கு அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுகிறாயே!” என்று கத்திக் கொண்டு காலயவனன் கண்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.

‘வேதங்களாலேயே என்னைப் பிடிக்க முடியவில்லை. நீ எப்படி என்னைப் பிடிக்கப் போகிறாய்?’ என்று முணுமுணுத்தபடி கண்ணனும் அதிவேகமாக ஓடினான். இறுதியாக ஒரு குகைக்குள் சென்று கண்ணன் ஒளிந்து கொண்டான். காலயவனனும் அந்தக் குகைக்குள் ஓடினான். அங்கே ஒருவன் போர்வை போர்த்திக் கொண்டு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். “இந்த இடையன் இங்கேயா உறங்கிக் கொண்டிருக்கிறான்?” என்று சொன்னபடியே அவனை உதைத்தான். உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் காலயவனனைப் பார்த்த அதேகணம், காலயவனன் எரிந்து சாம்பலானான்.

அங்கே உறங்கிக் கொண்டிருந்தது யார்? அவன்தான் முருகனுக்கு முன் தேவர்களின் படைத்தளபதியாக இருந்த முசுகுந்தன். முருகன் தேவசேனாதிபதியாகப் பதவியேற்றபின் முசுகுந்தன் தான் ஓய்வெடுக்க விரும்புவதாகத் தேவர்களிடம் கூறினான். தேவர்கள் அவனுக்குத் திவ்யமான மெத்தை, தலையணை, போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி, “நீ நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள். நாங்கள் திருமாலிடம் பிரார்த்தித்து அவரது திருக்கையில் உள்ள சக்கரத்தின் ஒளியை உன் கண்களுக்குப் பெற்றுத் தருகிறோம். நீ உறங்கும் போது யாரேனும் உன்னை எழுப்பினால், நீ கண் திறந்து பார்த்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்!” என்று கூறினார்கள்.

அந்த முசுகுந்தனைக் கண்ணனென எண்ணிக் காலயவனன் உதைக்கவே, அவன் பார்வை பட்டு எரிந்து சாம்பலானான். பின் கண்ணபிரான் முசுகுந்தனுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்தான். நடந்தவற்றையும் விளக்கினான். அதற்குள் மதுராவைத் தாக்க வந்த ஜராசந்தனின் சேனை, காலயவனனின் சேனையைக் கண்ணனின் சேனை எனத் தவறாக எண்ணி அவர்களைத் தாக்க, இருசேனைகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயின. யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது என்ற பரமசிவனின் வரத்தைப் பொய்யாக்கக் கூடாது. அதேசமயம், தன் விருப்பப்படி காலயவனனையும் வதம் செய்ய வேண்டும் என்றெண்ணிய கண்ணன்,

முசுகுந்தனைக் கருவியாகப் பயன்படுத்தி அவனைக் கொண்டு காலயவனனை முடித்து விட்டான். யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை வெல்ல முடியாது என ஜராசந்தன் கண்ட கனவு தவிடு பொடியானது. இவ்வாறு தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தன்னுடைய சங்கல்பத்தாலேயே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவராக திருமால் விளங்குவதால் ‘விக்ரமீ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 76-வது திருநாமம். “விக்ரமிணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைத்த காரியங்கள் நடந்தேறும்படி திருமால் அருள்புரிவார்.

77. தந்விநே நமஹ (Dhanviney namaha)

ராம-ராவண யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியது. ராவணனின் மகனான இந்திரஜித்தை, லக்ஷ்மணன் வதம் செய்தான். அதனால் கலங்கிய ராவணன், அவசரக் காலங்களில் நாட்டைப் பாதுகாப்பதற்காக வைத்திருந்த மூலபல சேனையைப் போருக்கு அழைத்து வந்தான். இருபுறமும் கூரான நீண்ட வாள்களை ஏந்திக்கொண்டு அவர்கள் யுத்த களத்துக்குள் நுழைந்தார்கள். மழைக்காலத்தில் கரையான் புற்றிலிருந்து கரையான்கள் வரிசையாக வருவது போல இலங்கைக் கோட்டையிலிருந்து அவர்கள் வானர சேனையை நோக்கி வரத் தொடங்கினார்கள். யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் மிதித்து நசுக்கிக் கொண்டு நடந்து வந்தார்கள்.

அந்தச் சேனையின் தொடக்கத்தைத்தான் காணமுடிந்ததே தவிர, அதன் முடிவு கண்ணுக்கு எட்டவில்லை. இவர்களோடு யுத்தம் செய்தால், பெரும்பாலான வானரர்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கணக்கிட்டான் ராமன். தனக்குத் தொண்டு செய்வதற்காக வந்த வானரர்கள் இவ்வாறு மடிவதை ராமன் விரும்பவில்லை. அதனால் அந்த மூலபல சேனையைத் தான் ஒருவனே எதிர்கொள்வது என முடிவெடுத்தான். “என் அன்பிற்குரிய வீரர்களே! இந்த மூலபல சேனையை நான் தனி ஒருவனாகவே போரிட்டு வெல்வேன்.

நீங்கள் பாதுகாப்பாக மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு நான் போர் புரிவதை, விளையாட்டை ரசிப்பது போல ரசித்து ஆனந்தமடையுங்கள். இது மன்னர் சுக்ரீவர், இளவரசர் அங்கதர், இலங்கையின் வருங்கால மன்னரான விபீஷணர், என் இளவல் லக்ஷ்மணன் அனைவருக்கும் பொருந்தும். அனைவரும் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று அமர்ந்து கொள்ளுங்கள்!” என்றான் ராமபிரான். வானரசேனை அனைத்தும் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டன. விபீஷணனும் லக்ஷ்மணனும் மரத்தின் அடியில் கைகட்டி நின்றுகொண்டு ராமன் போரிடுவதை ரசித்தார்கள்.

ராமன் கையில் வில்லுடன் தனி ஒருவனாக நிற்கும் அந்தப் பெரிய மைதானத்துக்குள் மூலபல சேனை நுழைந்து, ராமன் மேல் பாய்ந்தது. அவர்களை நோக்கி ராமன் ‘சம்மோகன அஸ்திரம்’ என்ற ஓர் அம்பைச் செலுத்தினான். அதன் சிறப்பு என்னவென்றால், அதனால் அடிபட்டவருக்குப் பார்க்கும் பொருட்களெல்லாம் அம்பை எய்தவர் போலவே தோன்றும். அதேபோல, அது பலவாகப் பெருகி அவர்களைத் தாக்கியது. தாக்கப்பட்ட ஒவ்வொரு அரக்கனுக்கும் அவனைச் சுற்றி உள்ள அரக்கர்கள் அனைவரும் ராமனாகவே தெரிந்தார்கள். அதனால் ஒவ்வொரு அரக்கனும் தன்னைச் சுற்றி உள்ள அரக்கர்களை ராமனென எண்ணி வாளால் அவர்களின் தலையை வெட்டத் தொடங்கினான்.

இறுதியில் அந்த மூலபல சேனை முழுவதையும் ராமன் வதம் செய்தான். ராமனின் வில்லில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும். போரில் ஆயிரம் யானைகள், பத்தாயிரம் தேர்கள், ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் வீரர்கள் வீழ்த்தப்பட்டால், தலையில்லாத முண்டம் ஒன்று எழுந்து ஆடுமாம். அவ்வாறு கோடி முண்டங்கள் ஆடினால் ராமனின் வில்லில் உள்ள அந்த மணி ஒருமுறை ஒலிக்கும்! மூலபல சேனையுடன் ராமன் போர் புரிந்தபோது தொடர்ந்து ஏழரை நாழிகைகளுக்கு (168 நிமிடங்கள்) அந்த மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்படியானால் எவ்வளவு தலைகள் வெட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிடவே முடியாதே என்கிறார் கம்பர்:

“ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடர்பரி ஒரு கோடி

சேனை காவலர் ஆயிரம்பேர் படின் செழுமணிக் கவந்தம் ஒன்று ஆடும்கானம் ஆயிரம் ஆயிர கோடிக்குக் கவின்மணி கணீல் என்னும் ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதன்றே.”

இப்படிப்பட்ட பராக்கிரமம் கொண்ட வில் ஏந்திய வீரனாகத் திகழ்வதால் திருமால் ‘தந்வீ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 77-வது திருநாமம். “தந்விநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் வரும் தடைகளை எல்லாம் சார்ங்கபாணி தவிடுபொடியாக்கி அருளுவார்.

78. மேதாவிநே நமஹ (Medhaaviney namaha)

மகாபாரத யுத்தத்தின் பன்னிரண்டாம் நாள். துரோணாச்சாரியார் சக்கர வியூகம் அமைத்துப் பாண்டவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார். சக்கர வியூகத்தை உடைக்கத் தெரிந்த ஒரே வீரனான அர்ஜுனன், சமசப்தகர்களோடு வேறு பகுதியில் போர் புரிந்து கொண்டிருந்தான். அப்போது அர்ஜுனனின் மகனான அபிமன்யு தர்மராஜனிடம், “பெரியப்பா! எனக்கு அந்தச் சக்கர வியூகத்தினுள்ளே நுழையத் தெரியும். என் தாயின் கருவில் நான் இருக்கையில் அம்முறையைத் துரோணர் விளக்கக் கேட்டுள்ளேன். ஆனால் அதிலிருந்து வெளியே வரும் முறை எனக்குத் தெரியாது!” என்றான்.

தர்மராஜனும் மற்ற பாண்டவர்களும், “மகனே! அப்படியானால் நீ சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல். நாங்களும் உன்னைப் பின் தொடர்ந்து உள்ளே வந்து எதிரிகளைத் தாக்கி விடுகிறோம்!” என்றார்கள். அபிமன்யுவும் சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றான். ஆனால், மற்ற பாண்டவர்கள் அவனைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைய முற்பட்டபோது, துரியோதனனின் தங்கையான துச்சலையின் கணவன் ஜயத்ரதன் அவர்களைத் தடுத்து விட்டான். அதனால் அபிமன்யு சக்கர வியூகத்தினுள்ளே தனியாளாக மாட்டிக்கொண்டான்.

துரோணர், கர்ணன், கிருபாச்சாரியார் உள்ளிட்ட அனைவரும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அன்றைய நாள் முழுவதும் தனியாக அவர்களை எதிர்த்துப் போரிட்ட அபிமன்யு, அன்று மாலை அந்த வஞ்சகத் தாக்குதலுக்கு இரையானான். தன் மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அர்ஜுனன், அந்த மரணத்துக்குக் காரணமான ஜயத்ரதன் மேல் கடும் கோபம் கொண்டான். “நாளை மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் ஜயத்ரதனின் தலையை வெட்டுவேன். அப்படிச் செய்ய முடியாமல் போனால் தீயில் விழுந்து உயிர் துறப்பேன்!” என்று சபதம் செய்தான்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட துரியோதனன், சகுனியையும் துரோணரையும் அழைத்து, “நாமாகப் போர் புரிந்து அர்ஜுனனைக் கொல்வது மிகக் கடினம். அதனால் நாளை மாலைவரை அர்ஜுனனின் கண்களில் படாமல் ஜயத்ரதனைக் காத்துவிட்டால், அர்ஜுனன் தானே தீயில் விழுந்து இறந்து விடுவான்!” என்றான். பதின்மூன்றாம் நாள் யுத்தம். ஜயத்ரதனை அர்ஜுனன் நெருங்க முடியாதபடி துரோணர் வியூகம் அமைத்திருந்தார். எவ்வளவு முயன்றும் அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கமுடியவில்லை. மாலைப் பொழுது வந்தது. சூரியனும் அஸ்தமித்தது. “கண்ணா! நான் என்ன செய்வேன்?” என்று தன் தேரோட்டியான கண்ணனைப் பார்த்து அர்ஜுனன் வினவினான்.

“அர்ஜுனா! சொன்ன சொல் தவறுவது உன்னைப் போன்ற வீரனுக்கு அழகல்ல. அதனால் அக்னிப் பிரவேசம் செய்!” என்று சொல்லிக் கண்ணனே தீமூட்டிக்  கொடுத்தான். “நீ சுத்த வீரன். அதனால் வில், அம்பு, கவசங்களுடன் தீயில் குதிக்க வேண்டும்!” என்றான் கண்ணன். அர்ஜுனனும் அவ்வாறே அக்னியைப் பிரதட்சிணம் செய்து கொண்டிருக்கையில், அவன் தீயில் குதிக்கப் போவதைக் காண்பதற்காக, அதுவரை ஒளிந்து கொண்டிருந்த ஜயத்ரதன் வெளியே வந்தான். உடனே கண்ணன், “அர்ஜுனா! அதோ பார் ஜயத்ரதன்! அவன் தலையைக் கொய்து விடு. அவனது தந்தை விருத்தக்ஷத்ரன் காசியில் தவம் புரிந்து கொண்டிருக்கிறார்.

அவர் மடியில் போய் இவன் தலை விழும்படி நீ அம்பு எய்திட வேண்டும்!” என்றான். அவ்வாறே அர்ஜுனன் விடுத்த கணை, ஜயத்ரதனின் தலையைக் கொய்தது. தன் தங்கையின் கணவன் மரணம் அடைந்ததைக் கூடப் பொருட்படுத்தாத துரியோதனன், “சூரிய அஸ்தமனத்துக்கு முன் ஜயத்ரதனைக் கொல்வேன் என்றுதானே சபதம் செய்தான். ஆனால் சூரியன் அஸ்தமித்தபின் தான் அர்ஜுனன் அவனைக் கொன்றான். அதனால் மூட்டிய நெருப்பில் அர்ஜுனன் குதிக்க வேண்டும்!” என்றான். அப்போது கண்ணன், “சூரியன் இன்னும் அஸ்தமிக்கவே இல்லை.

என் சக்கராயுதத்தால் நான் சூரியனை இவ்வளவு நேரம் மறைத்திருந்தேன்!” என்று சொல்லித் தன் கையை மேலே உயர்த்தினான். சக்கரம் சூரியனை விடுவிக்கவே சூரியன் வானில் பிரகாசித்தது. சகுனி துரியோதனனிடம், “மருமகனே, கவலைப்படாதே! அர்ஜுனனின் தலை சிறிது நேரத்தில் வெடித்துச் சுக்கு நூறாகப் போகிறது. ஜயத்ரதனின் தந்தை விருத்தக்ஷத்ரன் தன் மகனின் தலையைக் கீழே சாய்ப்பவனின் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதற வேண்டுமெனப் பரமசிவனிடம் வரம் பெற்றுள்ளார்!” என்றான்.

ஆனால் கண்ணனின் அறிவுரைப்படி ஜயத்ரதனின் தலை அவன் தந்தையின் மடியிலேயே சென்று விழும்படி அர்ஜுனன் அம்பெய்தி விட்டான். தவம் புரிந்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரனின் மடியில் போய் அந்தத் தலை விழுந்தது. “ஐயோ! இதென்ன மண்டை ஓடு?” என அந்தத் தலையைக் கீழே தள்ளிய விருத்தக்ஷத்ரனின் தலை வெடித்துச் சிதறியது. இச்செய்தியைக் கேள்விப்பட்டு மேலும் ஏமாற்றம் அடைந்தான் துரியோதனன். அப்போது அச்வத்தாமா, “துரியோதனா! நீ எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் அர்ஜுனனை வீழ்த்த முடியாது. ஏனெனில் அனைத்தும் அறிந்த சர்வக்ஞனான கண்ணன் அவனுடன் இருக்கிறான். நீ உன் மனத்தில் என்ன திட்டம் தீட்டினாலும்,

எதை நினைத்தாலும், அவற்றையெல்லாம் கண்ணன் அறிந்து கொண்டுவிடுவான்!” என்றான். இக்கருத்தையே தொண்டரடிப்பொடியாழ்வார், “உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதி” என்று பாடினார் இவ்வாறு அனைவரின் உள்ளங்களில் இருக்கும் அனைத்தையும் அறியவல்லவராக விளங்குவதால் திருமால் ‘மேதாவீ’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 78-வது திருநாமமாக அமைந்துள்ளது. “மேதாவிநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்லறிவைத் திருமால் அருளுவார்.

79. விக்ரமாய நமஹ (Vikramaaya namaha)

பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் சத்துவ குணம் யாருக்கு உள்ளது என அறிந்துகொள்ள விரும்பிய பிருகு மகரிஷி, ஒவ்வொரு தெய்வத்தையும் பரிசோதிக்கச் சென்றார். திருமாலைப் பரிசோதிக்கச் சென்றபோது, திருமாலின் திருமார்பிலேயே உதைத்தார் தன் மார்பில் பிருகு உதைத்த போதும், திருமால் பிருகு மேல் கோபம் கொள்ளாமல், அவரது பாதங்களை வருடி விட்டதால் திருமாலுக்கே சத்துவ குணமுண்டு எனத் தெளிந்தார் பிருகு மகரிஷி ஆனால் அத்திருமார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமி, “ஸ்வாமி! உங்கள் மனைவியின் இருப்பிடத்தை உதைப்பவர் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லை.

இதிலிருந்தே என்மேல் உங்களுக்கு அன்பு இல்லை என்று தெரிகிறது. இனி இந்தத் திருமார்பில் இருக்க நான் விரும்பவில்லை!” எனச் சொல்லித் திருமாலின் திருமார்பை விட்டுப் பிரிந்து கொல்லாபுரம் சென்றாள். பின் திருமால் திருமலையில் ஸ்ரீநிவாசனாகத் திருவவதாரம் செய்து மீண்டும் திருமகளை அடைந்தார். ஸ்ரீநிவாச கல்யாணம் நிறைவடைந்த பின், பிருகு மகரிஷி, “திருமகள் உறையும் திருமார்பை உதைத்து விட்டோமே! அது பெரிய குற்றமாயிற்றே! திருமகளிடம் நாம் இழைத்த பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்திட வேண்டும்!” எனத் தீர்மானித்தார்.

அதனால் ஹேமரிஷி என்ற பெயருடன் கும்பகோணத்தில் பிருகு மகரிஷி அவதரித்தார். தான் செய்த தவறை மன்னித்தருளும்படி மகாலட்சுமியிடம் வேண்டித் தவம் புரிந்தார். மேலும் தன்னை ஏற்று அங்கீகரித்ததற்கு அடையாளமாக மகாலட்சுமியே தனக்கு மகளாக வந்து அவதரிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். அவரது தவத்துக்கும் பிரார்த்தனைக்கும் திருவுள்ளம் உகந்த மகாலட்சுமி, கும்பகோணத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு தங்கத் தாமரையின் மேல் அவதரித்தாள். வடமொழியில் கோமளம் என்றால் தங்கம் என்று பொருள். தங்கத் தாமரையில் அவதரித்தபடியால் கோமளவல்லி என்று அவளுக்குப் பெயர் சூட்டினார் ஹேமரிஷி.

மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியைத் திருவரங்கநாதனுக்கே திருக்கல்யாணம் செய்து வைக்க விழைந்த ஹேமரிஷி திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தார். கோமளவல்லியும் இணைந்து தவம் புரிந்தாள். திருவரங்கத்திலுள்ள பிரணவாகார விமானத்திலிருந்தே ஒரு தேரை உருவாக்கிய அரங்கநாதன், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட அந்தத் தேரில் கும்பகோணத்துக்கு வந்து கோமளவல்லியை மணம்புரிந்தான். இன்றும் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் கோமளவல்லி மணவாளனாகக் கும்பகோணத்தில் குதிரைகளும் யானைகளும் பூட்டிய தேர் வடிவிலுள்ள கர்ப்பக்கிரகத்திலே எழுந்தருளியுள்ளான்.

சார்ங்கபாணிப் பெருமாள் - கோமளவல்லித் தாயாரின் திருக்கல்யாணத்தைக் கண்டு மன நிறைவடைந்த ஹேமரிஷி, பத்ரிநாத்தை அடைந்தார். அங்கே வியாசரைச் சந்தித்துத் திருமால் தனக்குச் செய்த அனுக்கிரகத்தை விவரித்து மகிழ்ந்தார். மேலும், “வேத வியாசரே, எனக்கொரு சந்தேகம். அதை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்!” என வேண்டினார். “என்ன சந்தேகம்?” என்று கேட்டார் வியாசர். “திருமால் திருவரங்கத்திலிருந்து குடந்தைக்கு வருகையில், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் வந்தார். அதெப்படி ஒரே தேரில் மெதுவாக நடக்கும் யானையையும் விரைந்து ஓடும் குதிரையையும் பூட்ட முடியும்? அவ்வாறு பூட்டினால் தேர் சீராக ஓடுமா?” என்று கேட்டார் பிருகு மகரிஷி.

அதற்கு வியாசர், “வேதத்தில் சம்ஹிதை, சாகை என இரு பாகங்கள் உண்டு. சம்ஹிதை பாகத்தை ஓதினால் அது குதிரையின் ஓட்டத்தால் உண்டாகும் ஒலி போலத் தோன்றும். சாகை பாகத்தை ஓதினால் அது யானையின் நடையோசையைப் போலத் தோன்றும். இந்த ஒலிகளின் வடிவிலுள்ள வேதத்தையே திருமால் தனக்கு வாகனமாகக் கொண்டிருப்பதை உருவகப்படுத்திக் காட்டவே குதிரை, யானை இரண்டும் பூட்டப்பட்ட தேரோடு குடந்தைக்கு வந்து உமக்கு அருள்புரிந்தார்!” என விளக்கினார். கருடனும் வேத ஸ்வரூபியாகவே விளங்குகிறார். காயத்ரி மந்திரம் அவரது கண்கள், த்ரிவ்ருத் அவரது தலை, யஜுர்வேதம் அவரது திருநாமம்,

வேதசந்தங்கள் அவரது அங்கங்கள், திஷ்ண்யம் எனும் வேதப்பகுதி அவரது நகங்கள், வாமதேவ்யம் அவரது உடல், ஸ்தோமம் அவரது ஆத்மா, பிருஹத், ரதந்தரம் ஆகியவை அவரது இறக்கைகள், யஜ்ஞாயஜ்ஞம் அவரது வால். வேதமே தனக்கு வாகனமாக உள்ளதை உணர்த்தவே, வேத ஸ்வரூபியான கருடன் மீதேறி, கருடவாகனத்தில் திருமால் காட்சியளிக்கிறார். ‘வி’ என்றால் வடமொழியில் பறவை என்று பொருள். வேதஸ்வரூபியான கருடன் என்னும் பறவையைத் தனக்கு வாகனமாய்க் கொண்டபடியால் திருமால் ‘வி-க்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 79-வது திருநாமம்.“விக்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுடைய அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக உடன்வந்துக் காத்தருள்வார்.

80. க்ரமாய நமஹ (Kramaaya namaha)

“உறங்காப்புளி, தோலா வழக்கு, ஊறாக் கிணறு, காயா மகிழ் - திருக்கண்ணங்குடி” என்ற தொடரை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது எப்படி வந்தது? திருமங்கையாழ்வார் திருவரங்கநாதனுக்கு மதில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடப் பணிக்குத் தேவையான பொருள் ஈட்ட என்ன வழி என்று சிந்திக்கலானார். அப்போது நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றுள்ளது. அதை விற்றால் மதில் கட்டுவதற்குத் தேவையான பணம் கிடைத்துவிடும் என்று சிலர் தெரிவிக்க உடனே நாகப்பட்டினம் சென்றார். அச்சிலையைப் பார்த்து, ‘உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு போன்றவை போதாதா தங்கச்சிலை தான் வேண்டுமா?’ என்று கேட்டார்.

“ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ

பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ

பித்தளை நற்செம்புகளால் ஆகாதோ - மாயப்

பொன்னும் வேண்டுமோ மதித்துன்னைப் பண்ணுகைக்கே”

- என்று ஆழ்வார் பாடிய மாத்திரத்தில் சிலையின் வடிவம் மட்டும் அப்படியே இருக்க, சுற்றி வேயப்பட்ட தங்கக் கவசம் பிதுங்கிக் கொண்டு வந்து விழுந்தது. அந்தத் தங்கக் கவசத்தை எடுத்துக்கொண்டு திருவரங்கத்தை நோக்கிச் சென்றார். பொழுது சாய்ந்துவிட்டதால் வழியில், திருக்கண்ணங்குடியில் சாலை ஓரத்தில் நாற்று நடுவதற்காகப் பண்படுத்தப் பட்டிருந்த ஒரு வயலில் அந்தக் கவசத்தைப் புதைத்துவிட்டு, அதன் அருகே இருந்த புளியமரத்தடியில் உறங்கச்சென்றார். அந்தப் புளியமரத்தைப் பார்த்து, “நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது!” என்று கூறினார்.

அடுத்தநாள் காலை, வயலுக்குச் சொந்தக்காரன் வயலை உழுவதற்காக வந்தான். உடனே அந்தப் புளியமரம் திருமங்கை ஆழ்வாரை எழுப்புவதற்காகத் தனது அனைத்து இலைகளையும் உதிர்த்தது. இவ்வாறு தான் உறங்காமல் இருந்து ஆழ்வாரை எழுப்பியதால், உறங்காப்புளி எனப் பெயர் பெற்றது. “உறங்காப்புளியே! நீ வாழ்க!” எனப் புளியமரத்தை வாழ்த்தினார் திருமங்கையாழ்வார். நிலத்தைச் சொந்தக்காரன் உழுதால், தனது தங்கச்சிலை அவனிடம் மாட்டிக்கொள்ளுமே என எண்ணிய திருமங்கையாழ்வார் அவனைப் பார்த்து, “இது என் நிலம்! நீ உழக்கூடாது!” என்றார் திருமங்கையாழ்வார்.

அவன், “இது பரம்பரை பரம்பரையாக எனது நிலம்!” என்றான். வாக்குவாதம் முற்றவே, ஊர்ப்பஞ்சாயத்து கூடியது. நிலத்தின் சொந்தக்காரன் தன் உரிமைப் பட்டயத்தைக் காட்டினான். திருமங்கையாழ்வார், “என்னிடமும் பட்டயம் உள்ளது. ஆனால் அது திருவரங்கத்தில் உள்ளது. ஒருநாள் அவகாசம் தாருங்கள், எடுத்து வருகிறேன்!” எனச் சொன்னார். அதுவரை யாரும் நிலத்தை உழக்கூடாது என்று தடை விதித்தது பஞ்சாயத்து. அதைப் பயன்படுத்திக் கொண்டு அன்றிரவு  புதைத்திருந்த தங்கச்சிலையைத் திருமங்கையாழ்வார் கொண்டு சென்றார்.

மறுநாள் பஞ்சாயத்து கூடியபோது திருமங்கையாழ்வார் பட்டயத்தோடு வரவில்லை. நிலத்தின் உரிமையாளனின் பட்டயத்தையும் காணவில்லை. அதனால் தீர்ப்பு சொல்ல முடியாமல் அது தோலா (தீர்வு காணப்படாத) வழக்காகவே முடிந்தது. திருக்கண்ணங்குடியில் ஊர்க்கிணற்றின் அருகே நின்றிருந்த பெண்களிடம் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார் திருமங்கையாழ்வார். இவர் நிலத்தை ஏமாற்றி வாங்கியது போல், நம் பானையையும் வாங்கிவிட்டால் என்ன செய்வது என அஞ்சிய அப்பெண்கள், தர மறுத்துவிட்டார்கள். “இவ்வூரின் கிணறுகளில் இனி தண்ணீர் ஊறாமல் போகும்!” எனச் சாபம் கொடுத்தார் ஆழ்வார்.

அடுத்த நொடியே அவ்வூரில் உள்ள கிணறுகள் வறண்டு போயின. அதனால் ஊறாக் கிணறு திருக்கண்ணங்குடி என்ற தொடர் வழக்கில் வந்தது. கிணறுகள் ஊறாமல் போகட்டும் எனச் சபித்த திருமங்கையாழ்வார், ஒரு மகிழ மரத்தடியில் பசி மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன் அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதை அருந்திக் களைப்பாறிய ஆழ்வார், “யாரப்பா நீ? இவ்வூரில் எந்தக் கிணற்றிலும் தண்ணீர் ஊறாது என்று சபித்தேனே! உனக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் கிடைத்தது?” என்று கேட்டார்.

“இந்த ஊரில் எல்லாக் கிணறுகளும் வற்றினாலும், என் வீட்டுக் கிணற்றில் மட்டும் எப்போதும் தண்ணீர் ஊறும்!” என்றான் அவன். “அந்த அதிசயக் கிணற்றை நான் காண வேண்டும்!” என்றார் ஆழ்வார். அவன் திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் கிணற்றுக்கு ஆழ்வாரை அழைத்துச் சென்று கோயில் கிணற்றைக் காட்டிவிட்டுக் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான்.

இறைவனே தனது தாகத்தைப் போக்க வந்தமையை எண்ணி மகிழ்ந்தார் ஆழ்வார். அவர் ஓய்வெடுத்த மகிழ மரம் காயா மகிழ் எனப் பெயர் பெற்றது. இன்றும் திருக்கண்ணங்குடியில் கிணறுகள் வறண்டு தான் காணப்படுகின்றன. இந்நாளில் அரசாங்கம் ஆழமாகத் தோண்டிப் பார்த்தபோது கூட உப்புநீர் மட்டுமே கிடைத்தது. ஆனாலும் தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் எப்போதும் தண்ணீர் உள்ளது. என்ன காரணம்?

திருமால் ‘க்ரமனாக’ விளங்குகிறார். ‘க்ரம:’ என்றால் நீங்காத செல்வத்தை உடையவன் என்று பொருள். அவரிடம் உள்ள எதற்கும் அளவுமில்லை, அவை குறைவதுமில்லை. திரௌபதிக்கு அவர் சுரந்த புடவை பல மைல்களைக் கடந்து நீண்டு கொண்டே போனதல்லவா? இப்படி குறையாத, எல்லையற்ற செல்வமுடைய திருமாலை ஸஹஸ்ரநாமத்தின் 80-வது திருநாமம் ‘க்ரம:’ எனக் குறிப்பிடுகிறது. “க்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நீங்காத செல்வம் நிறையும்.

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Related Stories: