ஹீரோக்களுக்கு எப்போது ஈகோ வரும்? சத்யராஜ் பதில்

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, சுனில், ஃபரியா அப்துல்லா நடித்துள்ள படம், ‘வள்ளி மயில்’. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்துள்ளார். விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார். 1980களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சுசீந்திரன் பேசும்போது, ‘இது கிரைம் திரில்லர் படம். வில்லனின் பின்னணியில் கதை நடக்கும். சத்யராஜ், அவரைச்சுற்றி 4 பேர்.

அதுபோல், விஜய் ஆண்டனியைச் சுற்றி 4 பேர் என்று பெரிய கூட்டம் இருக்கும். மிகவும் சிக்கலான கதை என்றாலும், திரையில் அதை மிக எளிமையான முறையில் சொல்லி இருக்கிறோம்’ என்றார். சத்யராஜ் பேசுகையில், ‘பொதுவாக நாம் நடிக்கும் படங்களில் நம்முடைய தனிப்பட்ட கொள்கைகளைப் பற்றி பேச முடியாது. நடிக்க வந்துள்ளோம், அதை மட்டும் செய்துவிட்டு போவோம் என்றிருப்போம். சில படங்களில் மட்டும்தான் நம் கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கான கேரக்டர் கிடைக்கும். அந்தவகையில் ‘வள்ளி மயில்’ படம் அமைந்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி.

பெண் கேரக்டரின் பெயரில் தலைப்பு வைத்ததற்கு அதிக மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட ஹீரோ விஜய் ஆண்டனிக்கு மிகவும் நன்றி. காரணம், பெண் கதாபாத்திரத்தின் பெயரில் தலைப்பு வைத்தால், ஹீரோக்களுக்கு சின்ன ஈகோ வரும். நானும் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவன் என்பதால், அதுபற்றி எனக்கு விவரமாக தெரியும். எம்.ஜி.ஆர் கூட பெண் கேரக்டரின் பெயர் கொண்ட ஏராளமான படங்களில் நடித்து வெற்றிபெற்று இருக்கிறார். அந்தவகையில் ‘வள்ளி மயில்’ படமும் மிகப்பெரிய வெற்றிபெறும். இது பொலிட்டிக்கல் கிரைம் திரில்லர் கதையுடன் உருவாகியுள்ளது’ என்றார்.

The post ஹீரோக்களுக்கு எப்போது ஈகோ வரும்? சத்யராஜ் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: