ரத்த காயங்களுடன் நடித்த அருண் விஜய்: ஏ.எல்.விஜய்

சென்னை: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ், ஜேசன் ஷா நடித்துள்ள படம், ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’. சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஏ.மகாதேவ் கதை எழுதியுள்ளார். ஏ.எல்.விஜய் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது:முதலில் ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருந்தது. லைகா புரொடக்‌ஷன்ஸ் குழுவினரும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இது அதிரடி ஆக்‌ஷன் படமாக இருப்பதால், தமிழில் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடலாம்’ என்று, ‘மிஷன் சாஃப்டர் 1’ என்று பெயர் மாற்றினார்கள். முழு கதையும் லண்டனில் நடக்கிறது. ஆக்‌ஷனுடன் கூடிய எமோஷனல் கேரக்டருக்கு அருண் விஜய் பொருத்தமாக இருந்தார். லண்டன் சிறை அதிகாரியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஆக்‌ஷன் காட்சி களில் ‘டூப்’ இல்லாமல் ஒரிஜினலாகவே நடித்த அருண் விஜய்க்கு பலமுறை ரத்த காயங்கள் ஏற்பட்டது.

லண்டன் பேருந்தில் சண்டைக்காட்சி படமானபோது, அவரது காலில் பலத்த அடிபட்டு வீங்கி விட்டது. கடுமையான வலியால் துடித்தார். மிகப்பெரிய பாதிப்பு இருந்தாலும், அறுவை சிகிச்சை செய்யாமல், சில நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு துணிச்சலுடன் நடித்தார். ஒருநாள் ஒரிஜினல் சங்கிலியை கையில் சுற்றிக்கொண்டு நடித்தார். அப்போது சங்கிலி கிழித்ததில் அவரது கையில் ரத்தம் வடிந்தது. அதையும் பொருட்படுத்தாமல் நடித்தார். லண்டன் சிறைச்சாலை அரங்குகளை சுமார் 5 கோடி ரூபாய் செலவில், நான்கரை ஏக்கர் பரப்பளவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். சிறைச்சாலையில் கைதிகளாக நடித்திருக்கும் 250 வெளிநாட்டினரை சென்னைக்கு வரழைத்து நடிக்க வைத்தது மிகப்பெரிய சவாலாக இருந்து. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

The post ரத்த காயங்களுடன் நடித்த அருண் விஜய்: ஏ.எல்.விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: