குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அபார வெற்றி

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று, குஜராத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி, 186 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 26வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில், புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், முதலிடத்தில் உள்ள குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும், பந்துகளை நேர்த்தியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தால், 5.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி குஜராத், 50 ரன்களை எட்டியது. 58 பந்துகளில் இந்த இணை, 100 ரன்களை குவித்து வலுவான துவக்கத்தை தந்தது. சுப்மன் கில்லும் அநாயாசமாக அரை சதத்தை கடந்து ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். 11வது ஓவர் முடிவில் பவுண்டரி விளாசி, சாய் சுதர்சன் அரை சதம் கடந்தார். இருவரும் சிறப்பாக ஆடி 120 ரன் குவித்திருந்த நிலையில், ஆவேஷ் கான் வீசிய 13வது ஓவரில், சுப்மன் கில் (38 பந்து 60 ரன்), அய்டன் மார்க்ரமிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அதையடுத்து, ஜோஸ் பட்லர், சுதர்சனுடன் இணை சேர்ந்தார்.

ரவி பிஷ்னோய் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் சாய் சுதர்சனும் (37 பந்து, 1 சிக்சர், 7 பவுண்டரி, 56 ரன்), பூரனிடம் கேட்ச் தந்து வீழ்ந்தார். பின், வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அதே ஓவரின் கடைசி பந்தில் சுந்தரும் (2 ரன்) அவுட்டானார். 12 பந்துகள் இடைவெளியில் 3 முக்கிய விக்கெட்டுகள் சாய்ந்ததால், குஜராத்தின் ரன் வேகம் குறையத் துவங்கியது. பின், பட்லருடன், ஷெர்ஃபான் ரூதர்போர்டு இணை சேர்ந்தார். இந்த இணையும் அதிக நேரம் நீடிக்கவில்லை. 17வது ஓவரை வீசிய திக்வேஷ் ரதி பந்தில், ஜோஸ் பட்லர் (16 ரன்) வீழ்ந்தார். அதன் பின், ஷாருக்கான் களமிறங்கினார்.

20வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர், ரூதர்போர்டையும் (22 ரன்), தெவாதியாவையும் (0 ரன்) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. ரஷித் கான் 4, ஷாருக்கான் 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். லக்னோ தரப்பில், ஷர்துல், ரவி பிஷ்னோய் தலா 2, திக்வேஷ், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் துவக்க வீரர்கள் அய்டன் மார்க்ரம், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினர். அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய இவர்கள், முதல் விக்கெட்டுக்கு, 65 ரன்கள் குவித்த நிலையில், பண்ட் (21 ரன்) அவுட்டானார்.

அதன் பின் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். இருவரும் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றியதால், ரன்கள் மளமளவென உயர்ந்தன. 12வது ஓவரில் மார்க்ரம் (31 பந்து, 1 சிக்சர், 9 பவுண்டரி, 58 ரன்) பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பூரனும் (34 பந்து, 7 சிக்சர், 1 பவுண்டரி, 61 ரன்), ரஷித் கான் பந்தில் வீழ்ந்தார். பின்னர், ஆயுஷ் படோனியும், டேவிட் மில்லரும் இணை சேர்ந்து வெற்றியை நோக்கி ஆட்டத்தை நகர்த்தினர். 19வது ஓவரில் டேவிட் மில்லர் (7 ரன்) ஆட்டமிழந்தார். 19.3 ஓவரில் லக்னோ அணி, 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆயுஷ் படோனி 28, அப்துல் சமத் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2, ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: