குஜராத்துக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி

 

கொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 39 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் 18வது தொடரின் 39வது லீக் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத் துவக்க வீரர்கள், சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி, 7 ஓவருக்கு 62 ரன் குவித்தது. 11வது ஓவரில் கில், 34 பந்துகளிலும், சாய் சுதர்சன் 33 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். 13வது ஓவர் வீசிய ஆண்ட்ரூ ரஸல் பந்தில், சாய் சுதர்சன் 52 ரன்னில்(36 பந்து, 1 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார்.

அப்போது அணியின் ஸ்கோர், 114 ஆக இருந்த நிலையில், 3வது விக்கெட்டுக்கு கில்லுடன், ஜோஸ் பட்லர் இணை சேர்ந்தார். அந்த ஓவரின் கடைசி 3 பந்துகளை, பட்லர் பவுண்டரிக்கு விரட்டி, கொல்கத்தா அணியை அதிரச் செய்தார். இருப்பினும், பின் வீசப்பட்ட ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் குஜராத் வீரர்கள் திணறினர். அதனால் ரன் வேகம் சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து, வைபவ் அரோரா வீசிய 18வது ஓவரில் சுப்மன் கில் 90 ரன்னில்(55 பந்து, 3 சிக்சர், 10 பவுண்டரி) ரிங்கு சிங்கிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அடுத்து வந்த ராகுல் தெவாதியாவும், ஹர்சித் ராணா பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து, பட்லருடன் தமிழக வீரர் ஷாருக்கான் இணை சேர்ந்து ஆடினார். கடைசி ஓவரில், இருவரும் சேர்ந்து 18 ரன் விளாசினர். முதல் இன்னிங்சில் குஜராத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. பட்லர் 41, ஷாருக்கான் 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில், அரோரா, ராணா, ரஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.அதையடுத்து, 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி, 20 ஓவருக்கு 159 ரன் மட்டுமே எடுத்து 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா பேட்டிங்கில் அதிகபட்சமாக ரகானே 50 ரன்(1 சிக்சர், 5 பவுண்டரி), ரகுவன்ஷி 27 ரன் எடுத்தனர்.

குஜராத் பந்து வீச்சில் பிரசாத் கிருஷ்ணா, ரஷித்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சிராஜ், இஷாந்த் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post குஜராத்துக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: