லக்னோவுக்கு எதிரான போட்டி டெல்லி அட்டகாச வெற்றி: அபிஷேக் போரல், கே.எல்.ராகுல் அரை சதம்; முகேஷ் அபார பந்து வீச்சு

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்த 40வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியின் எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 9 ரன்னில் கிளீன் போல்டானார். இதையடுத்து, களமிறங்கிய அப்துல் சமத் 2 ரன்னிலும், நன்கு ஆடிக் கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் 45 ரன்னிலும் முகேஷ்குமார் பந்து வீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர்.

அடுத்து இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் படோனி களமிறங்கி நிதானமாக ஆடினார். ஆட்டத்தின் கடைசி ஓவரை முகேஷ்குமார் வீசினார். இதில், படோனி முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக பவுண்டரி விளாசினார். 4வது பந்தில் போல்டாகி வெளியேறினார். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், கடைசி பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் மட்டுமே எடுத்தது. டேவிட் மில்லர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் முகேஷ்குமார் 4 விக்கெட்டும், ஸ்டார்க், துஸ்மந்த சமீரா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

160 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது.துவக்க வீரர்களாக அபிஷேக் போரல், கருண் நாயர் ஆகியோர் களமிறங்கினர். கருண் நாயர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கே.எல்.ராகுல், போரலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் விளாசிய நிலையில், அபிஷேக் போரல் 51 ரன்னில் (36 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். அடுத்த கேப்டன் அக்சர் பட்டேல், கே.எல்.ராகுலுடன் அதிரடியாக விளையாட டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 57 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), அக்சர் பட்டேல் 34 ரன் (20 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் மார்க்ரம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

* 100+ ரன்கள் குவிப்பு சாய் – கில் சாதனை
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் 39வது லீக் போட்டியில் குஜராத் அணிக்காக களமிறங்கிய சுப்மன் கில், சாய் சுதர்சன் இணை அற்புதமாக ஆடி ரன்களை குவித்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 114 ரன்களை விளாசியது. இதன் மூலம், அதிக முறை 100க்கு மேலான ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்த இந்திய அணியாக இந்த இணை அரிய சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த பட்டியலில், கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால், கவுதம் காம்பீர் – ராபின் உத்தப்பா இணை 5 முறை 100க்கு அதிகமான ரன்களை எடுத்து 2வது இடத்தில் உள்ளன. ஒட்டு மொத்த சாதனைப் பட்டியலில், விராட் கோஹ்லி – டிவில்லியர்ஸ் இணை, 10 முறை 100+ ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளது. கிறிஸ் கெயில் – விராட் கோஹ்லி 9 முறை, ஷிகர் தவான் – டேவிட் வார்னர், டூபிளெஸிஸ் – கோஹ்லி, சாய் சுதர்சன் – கில் ஆகியோர் தலா 6 முறை 100+ ரன்களை குவித்த இணைகளாக திகழ்கின்றனர்.

The post லக்னோவுக்கு எதிரான போட்டி டெல்லி அட்டகாச வெற்றி: அபிஷேக் போரல், கே.எல்.ராகுல் அரை சதம்; முகேஷ் அபார பந்து வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: