ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அசத்தல் வெற்றி


ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், ஐதராபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்த 41வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். டிரெண்ட் போல்ட் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில், டிராவிஸ் ஹெட் நமன்தீரிடம் கேட்ச் கொடுத்து, ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், தீபக் சாகர் வீசிய 3வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது, தீபக் சாகர் வீசிய பந்து, விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்டனிடம் அடைக்கலம் புகுந்தது.

ஆனால்,அவுட் கேட்டு தீபக் சாகரோ, விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனோ அம்பயரிடம் முறையிடாத நிலையில், இஷான் கிஷன் தானாகவே களத்தில் இருந்து வெளியேற தொடங்கினார். இதை கண்ட அம்பயரும் அவுட் கொடுத்து விட்டார். மூன்றாவது நடுவர் ஆய்வின்போது, பந்து பேட்டில் படாததும், அது அவுட் இல்லை என்பதும் தெளிவாக தெரியவந்தது. பின்னர், நிதிஷ்குமார் ரெட்டி 3வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். டிரெண்ட் போல்ட் வீசிய பந்தில், விக்னேஷ் புதூரிடம் கேட்ச் கொடுத்து, அபிஷேக் சர்மாவும் 8 ரன்னுடன் நடையை கட்டினார். அடுத்து ஹென்றிக் கிளாசென் களமிறங்கினார். தீபக் சாகர் வீசிய 5வது ஓவரின் முதல் பந்திலேயே, நிதிஷ்குமார் ரெட்டி மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அனிகேத் வர்மா, கிளாசெனுடன் ஜோடி சேர்ந்தார்.

பவர் பிளே முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, 9வது ஓவரை வீசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, அனிகேத் வர்மாவை வெளியேற்றினார். இதனால், 35 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து அணி தத்தளித்த நிலையில், 6வது விக்கெட்டுக்கு இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபினவ் மனோகர், கிளாசெனுடன் சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். ஆட்டத்தின் 15வது ஓவரில் சிக்சர் விளாசிய கிளாசென், தனது அரை சதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிளாசென், பும்ரா வீசிய 19வது ஓவரில், திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து, போல்ட் வீசிய 20 ஓவரில் 43 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த அபினவ் மனோகரும், ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி பந்தில் பேட் கம்மின்ஸ் போல்டானார். இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2வது இன்னிங்சை துவங்கிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன் இலக்கை எட்டி வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக ரோகித்சர்மா 70 ரன்(46 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), சூர்யகுமார் 40 ரன்(19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். ஐதராபாத் அணி பந்து வீச்சில் உனட்கட், ஈஷன் மலிங்கா, அன்சாரி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதே போல், இந்த போட்டியில் சியர்ஸ் கேர்ள்ஸ் பயன்படுத்தப்படவில்லை.

The post ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: