திருவண்ணாமலை, ஏப். 3:திருவண்ணாமலை மாவட்டத்தில், சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க ₹2.50 கோடி வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. அது தொடர்பாக தொழில்முனைவோர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தவும், அதில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்கப்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தொழில் முனைவோருக்கு ₹2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவியை தமிழக அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன், குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும்.
மேலும், நிலம், சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி, கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் போன்றவை ஏற்படுத்த வேண்டும்.
அதில், நிலம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவைக்கு அரசு மானியம் வழங்கும். அதனை, தொழில் முதலீடாக கருதப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், சேலத்தில் செயல்படும் துணி நூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும், இது தொடர்பான தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் 9ம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், திட்ட மதிப்பீடு தயாரித்தல், அரசு நிதி உதவி பெறுதல் போன்றவைக்கு வழிகாட்டப்படும்.
The post சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க ₹2.50 கோடி வரை நிதி உதவி பெற வாய்ப்பு appeared first on Dinakaran.