மதுராந்தகம், மார்ச் 28: மதுராந்தகம் புறவழி சாலையில் டயர் வெடித்து நின்று கொண்டிருந்த தர்பூசணி லாரி மீது சரக்கு லாரி மோதிய விபத்து ஏற்பட்டது. இதில், சாலையில் சிதறிய தர்பூசணி பழங்களை போட்டி போட்டு மக்கள் அள்ளி சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் புறவழி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றி கொண்டு சென்ற லாரி திடீரென டயர் வெடித்தது. உடனடியாக, லாரி டிரைவர் லாரியை நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சென்னை நோக்கி வந்த சரக்கு லாரி பழுதாகி நின்று கொண்டிருந்து தர்பூசணியுடன் சாலை ஓரம் நின்று இருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதனால், தர்பூசணி லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த தர்பூசணி பழங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி உருண்டு ஓடின. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த வாகனங்களில் இருந்து ஏராளமானோர் இறங்கி வந்து நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த தர்பூசணி பழங்களை எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தர்பூசணி பழங்களை அள்ளிய மக்களை அங்கிருந்து விரட்டினர். போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர். மேலும் சிதறி கிடந்த பழங்களை சேகரித்து மற்றொரு லாரியில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்துக்கு காரணமாக சரக்கு லாரி ஓட்டுனர் மீது மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுராந்தகம் புறவழிச்சாலையில் தர்பூசணி லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து: பழங்களை போட்டி போட்டு அள்ளி சென்ற பொதுமக்கள் appeared first on Dinakaran.