முந்தையநாள் தோன்றிய கட்சிக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஆர்ப்பாட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேட்டி

குன்றத்தூர், மார்ச் 30: பரணிபுத்தூர் பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தவெக கட்சி குறித்து நிருபர்களின் கேள்விக்கு, முந்தையநாள் தோன்றிய கட்சிக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்தார். 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்த மக்களுக்கு ரூ.4000 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு தராமல் இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று பரணிபுத்தூர் பகுதியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, டி.ஆர்,பாலு எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், குறைந்தபட்சம் 100 நாளைக்காவது வேலை தரவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், இந்த 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜ ஆட்சி இந்த திட்டத்தின் நிதியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. 2020-2021ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத்திற்கான நிதி 2021-22ம் ஆண்டில் ரூ.98 ஆயிரம் கோடியாக இருந்தது. பின்னர், 2023-24ம் ஆண்டில் ரூ.89 ஆயிரம் கோடியானது. அதுவே, 2024-25ம் ஆண்டில் ரூ.84 ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி பட்ஜெட்டில் குறைந்து கொண்டே வருகிறது.

அதன்படி, இந்தாண்டு ரூ.7031 கோடியாக உள்ள நிதி ரூ.5000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசே கூறியுள்ளது. நமது கணக்குப்படி ரூ.4034 கோடி குறைந்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இந்த, 100 நாள் வேலை திட்டம் தமிழக அரசின் திட்டம் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், 100 சதவீதம் ஒன்றிய அரசின் நிதியிலிருந்து நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஒன்றிய அரசு நிதி கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் தமிழக மக்களுக்காக பல நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை மற்றும் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் தோறும்
1000 ரூபாய் கொடுத்து வருகிறார். இவ்வாறு பல திட்டங்களை தமிழக மக்களுக்காக வாரி வழங்கி வரும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான முழு நிதியும், ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியும் முழுமையாக தராமல் வேண்டுமென்றே ஒன்றிய அரசு தாமதப்படுத்தி வருகிறது. எனவே, அதற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முந்தைய நாள் தோன்றிய கட்சிக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. 64 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிற நான் விஜய்க்கு பதில் கூற முடியுமா?. இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பரணி புத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

The post முந்தையநாள் தோன்றிய கட்சிக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஆர்ப்பாட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: