சென்னை, மார்ச் 28: பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு 9 சிறுவர்களை கூலி வேலைக்கு அழைத்து வந்த 3 வடமாநில ஏஜென்ட்களை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, பீகாரில் இருந்து வந்த சாப்ரா எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய மூவர், 13, 14 மற்றும் 15 வயதுடைய 9 சிறுவர்களுடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, சிறுவர்களுடன் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், உத்திர பிரதேசத்தை சேர்ந்த சைலேஷ் ராஜ்பகர் (21), பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் (28), சுரேந்தர் ரவாத் (50) என்பதும், பீகாரில் இருந்து 9 சிறுவர்களை தமிழகம் மற்றும் கேரளாவில் கூலி வேலையில் ஈடுபடுத்த அழைத்து வந்தது உறுதியானது.
இதையடுத்து, போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட 9 வடமாநில சிறுவர்களையும் ராயபுரத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும், சிறுவர்கள் மீட்கப்பட்டது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வடமாநிலத்தில் இருந்து கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகம், கேரளாவிற்கு கூலிவேலைக்கு அழைத்து வந்த 9 வடமாநில சிறுவர்கள் மீட்பு: 3 ஏஜென்ட்கள் கைது appeared first on Dinakaran.