காஞ்சிபுரம், மார்ச் 29: காஞ்சிபுரத்தில் யதோத்தகாரி பெருமாள் கோயில் தோரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுந்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் புகழ்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான சின்ன காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், பங்குனி மாத பிரமோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 7ம் நாளாக நேற்று தேர் பவனி விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, யதோத்தகாரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
பின்னர், ஸ்ரீதேவி – பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் யதோத்தகாரி பெருமாள் பல்வேறு மலர் மாலைகள், தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய பின்னர், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு ரங்கசாமி குளம் பகுதியிலிருந்து செட்டி தெரு, வரதராஜப்பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நான்கு ராஜ வீதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, “கோவிந்தா… கோவிந்தா…’’ என பக்தி கர கோஷங்களை எழுப்பியும், கற்பூர தீபாராதனைகளை காட்டியும், ஸ்ரீ யதோத்தகாரி பெருமாளை வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து, எம்பெருமானின் தரிசனம் பெற்று சென்றனர்.
The post பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.