காஞ்சிபுரம், மார்ச் 29: காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் மாநகராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, அந்தந்த மாநகராட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 2025-2026க்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் மாமன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, வாசித்தார். நிதிநிலை அறிக்கையில் வருவாய் மற்றும் மூலதன நிதியாக 253.10 கோடியும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியாக ₹407.06 கோடியும், கல்வி நிதியாக ₹13.04 கோடி என மொத்தம் ₹673 கோடியே 20 லட்சம் வரவினங்களாக உள்ளது. இதேபோல், மொத்தம் ₹672 கோடியே 34 லட்சம் செலவினங்களாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் செலவினங்களைக் காட்டிலும், வரவினங்கள் அதிகமாக உள்ள நிலையில் ₹86 லட்சம் மாநகராட்சியின் உபரியாக உள்ளது என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள நலத்திட்ட பணிகளாக, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம் மற்றும் பொன்னேரி கரை ஏரியை பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து புனரமைத்து பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் எனவும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் பெண்கள் உடற்பயிற்சி கூடம் அமைக்கவும் ₹30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வண்ணம் கிரிக்கெட் வலை பயிற்சி மைதானம், பேட்மிட்டன் ஷெட்டில் கார்க் என பல வகைகளில் விளையாட்டு திடல் அமைக்க ₹80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கும் புதியதாக எல்இடி மின் விளக்குகள் அமைக்க ₹2 கோடி அரசின் நிதி கோரப்பட்டுள்ளது. தாட்டித்தோப்பு – முருகன் குடியிருப்பு பாலம் மற்றும் காவலான்கேட் – உத்திரமேரூர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பாலங்களுக்கு அணுகு சாலை அமைக்க ₹4 கோடியே 50 லட்சம் அரசின் நிதி கோரப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்துபள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு பள்ளிக்கு 4 முதல் 8 எண்ணிக்கைகள் சிசிடிவு கேமரா ஆண்டு பராமரிப்புடன் பொருத்துவதற்கு ₹50 லட்சம் செலவினம் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிப் பகுதி முழுவதும் சுகாதரத்தினை மேம்படுத்தும் விதமாக சுகாதார பணிகளுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்தல், மாநகரில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்கு ₹710 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மாநகராட்சி பங்களிப்பு (உலக வங்கி நிதி) திட்டம் போன்ற பல்வகை அரசின் நிதி ஆதாரங்களை கொண்டு மூலதனப் பணிகளை மேற்கொள்ள ₹35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைத்து மாநகரப் பகுதியில் நீர்வளத்தினை மேம்படுத்தும் பணிகளுக்கு ₹416.80 லட்சம் அரசின் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளவும், காலை நேரத்தில் சிற்றுண்டி மற்றும் இரவு நேரத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேநீர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நிலை அறிக்கை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்த 23வது வார்டு கவுன்சிலர் புனிதா சம்பத், மாநகராட்சிக்கு கழிவுநீர் போட்டியில் வாங்க டெண்டர் விடப்பட்டும் வாங்கவில்லை கூறி பிளாஸ்டிக்கிலான கழிவுநீர் ஊர்தி மாதிரி பொம்மையை கூட்டத்திற்கு சிறு பிள்ளைபோல இழுத்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பரபரப்பு ஏற்படுத்தினார். மேலும், தனது வார்டுக்கு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளவில்லை எனக்கூறி கேள்வி கேட்டுவிட்டு கூட்டத்தையும் புறக்கணித்துவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
The post காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு : விளையாட்டு திடல்கள் அமைக்க ரூ.80 லட்சம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.