திருப்போரூர், மார்ச் 29: திருப்போரூர் புறவழிச்சாலையில் மரக்கன்றுகளுக்கு நடுவே மின்கம்பங்கள் அமைக்கும் மின்வாரியத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை புறவழிச்சாலை உள்ளது. இந்த, புறவழிச்சாலைப் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்று, தற்போது வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு புதிய சாலை அமைக்கும்போதும் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் சாலைப்பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த புறவழிச் சாலையின் இரு பக்கங்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அடிக்கடி லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மரக்கன்றுகள் நன்றாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் காலவாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு கூடுதல் திறனுடன் கூடிய மின் இணைப்பு வழங்குவதற்காக புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த, மின் கம்பங்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு இடையில் புதைக்கப்படுகின்றன. விரைவில் இந்த மின் கம்பங்களில் வயர்கள் பொருத்தப்பட்டு இணைப்பு வழங்கப் பட உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மரக்கன்றுகள் வளர்ந்து பெரிய மரங்களாக மாறும் நிலை உள்ளது. அவ்வாறு பெரிய மரங்களாக வளரும்போது அவை தற்போது அமைக்கப்படும் மின் வயர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.
மின்வயர்களில் மரக்கிளைகள் உரசினால் மின் வாரிய ஊழியர்கள் மொத்த மரங்களையும் வெட்டித்தள்ளுவர் என்று இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆகவே, போதுமான இடவசதி உள்ள நிலையில் மரக்கன்றுகளுக்கு இடையில் மின் கம்பங்களை நடக்கூடாது என்று அவர்கள் ேகாரிக்கை வைத்து உள்ளனர். இன்னும் மின் வயர்களை பொருத்தும் பணி நடைபெறாத நிலையில் மின் கம்பங்களை அகற்றி பாதுகாப்பான இடத்தில் நடுவதன் மூலம் மரங்களை அகற்ற வேண்டிய தேவை இருக்காது என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்வாரியம் ஆகிய இரண்டு அரசு துறைகளும் இணைந்து இப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
The post திருப்போரூர் புறவழிச்சாலையில் மரக்கன்றுகளுக்கு நடுவே மின்கம்பங்கள் அமைக்கும் மின்வாரியம்: இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.