திருப்போரூர், மார்ச் 28: கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சாலையில் ஒளிரும் தடுப்புகள் அமைத்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த, சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் புதுச்சேரி, கடலூர், மாமல்லபுரம் நோக்கி செல்கின்றன. மேலும், சோழிங்கநல்லூர், கோவளம் ஆகிய இடங்களில் இந்த கிழக்கு கடற்கரை சாலைக்கு குறுக்கே இணைப்பு சலைகள் செல்கின்றன. வாகனங்கள் வேகமாக வரும்போது, இந்த இணைப்பு சாலைகளில் மற்ற வாகனங்கள் சாலையை கடக்க முற்படும்போதும், பாதசாரிகள் கடந்து செல்லும்போதும் விபத்து ஏற்படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில், கோவளம் சந்திப்பில் அண்மையில் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இரவு நேரங்களில் கோவளம் சந்திப்பு இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், இந்த சாலையை ஆய்வு செய்து இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி, கோவளம் சந்திப்பில் வாகனங்கள் தங்களின் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்த தடுப்புகளில் தற்போது நவீன முறையில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 1 கிமீ தூரத்திற்கு முன்பாக சாலைத்தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளின் கண்களுக்கு நன்கு புலப்படும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வாகனத்தின் வேகத்தை குறைப்பதோடு கவனத்துடன் ஓட்டிச்செல்ல முடியும் என்றும், விபத்துகள் குறையும் என்றும் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 1 கிமீ தூரத்திற்கு முன்பாக சாலைத்தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளின் கண்களுக்கு நன்கு புலப்படும் வகையில் ஒளிரும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
The post விபத்துகளை தடுக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஒளிரும் சாலை தடுப்புகள் appeared first on Dinakaran.