சென்னை, மார்ச் 27: தமிழகத்தில் 3 வழித்தடங்களில் ஆர்ஆர்டிஎஸ் போக்குவரத்து அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்தார். ஆர்ஆர்டிஎஸ் என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். ஆர்ஆர்டிஎஸ் என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.
இந்த ரயில் மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும். ஏசி கோச்சுகள், வை-பை ஆட்டோமெட்டிக் கதவுகள், வேகமான பயணம், மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது. மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம். தற்போது இவை டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் அவ்வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்திடவும், சென்னை- செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் (167 கி.மீ.,), சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் (140 கி.மீ.,), கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் (185 கி.மீ.,) வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கிட சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்படும், என பட்ஜெட்டில் கூறினார்.
பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய மூன்று வழித்தடங்களில், பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்கிட, விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்த கையோடு முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக ஆர்ஆர்டிஎஸ் போக்குவரத்து சேவை: சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் appeared first on Dinakaran.