எடப்பாடி-அமித்ஷா சந்திப்பால் அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்: திடமான கொள்கை இல்லாத தலைவர் என விரக்தி

சென்னை: எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா சந்திப்பால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லியில் சுமார் 2 மணி நேரம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு நேற்று காலையில் டெல்லியில் பேட்டியளித்த எடப்பாடி, தமிழக மக்கள் பிரச்னை குறித்து பேசியதாகவும், மனு கொடுத்ததாகவும் கூறினார். அப்போது கூட்டணி குறித்து மழுப்பலான பதிலை கூறிவிட்டுச் சென்றார். 8.25 மணி முதல் 10.30 மணி வரை சந்தித்துப் பேசினர். அதில் முதல் 25 நிமிடங்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தம்பித்துரை, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இருந்தனர். பின்னர் அவர்கள் வெளியில் அனுப்பப்பட்டு 8.50 மணி முதல் 10.30 மணி வரை அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் தனியாக பேசினர். கூட்டணி குறித்து பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுத்தாலும், அதிமுக தொண்டர்களோ, தமிழக மக்களோ இதனை நம்பவில்லை.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்ேபாது, இது எதற்காகவோ, ஏனென்றோ தெரியாது. ஆனால் இச்செய்தி மீடியாவில் வரும்போது அதிமுக தொண்டர்களுக்கு கூரான ஈட்டியால் அவர்களது இதயத்தை கிழித்து அறுத்து தொங்கவிடுவது போல்தான் உள்ளது என்றனர். 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகே இதுபோன்ற ஒவ்வொரு செய்திகளையும், செயல்களையும் அதிமுக தொண்டர்கள் விரும்புவதே இல்லை. எனினும் 2021ல் பொருந்தாக் கூட்டணி என்றாலும் அதைப் பொருத்தி பார்க்கும் வேலையில் அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டார்கள். அதன் விளைவுதான் 75 இடங்களில் வெற்றி மற்றும் 38 தொகுதிகளில் 1000-2000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி. 26 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி. 58 தொகுதிகளில் 10,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.

மொத்த தேர்தலிலும் 2-3% வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி. இதை ஒரு புறமாக அப்படியே வைத்துக் கொள்வோம். முள்ளை பிடித்தாலும் முழுவதுமாக பிடிக்க வேண்டும். ஒன்று பாஜவுடன் எப்போதுமே கூட்டணியில்லை என்றால் அதிமுக தொண்டர்கள் ஏகமனதாக களப்பணியாற்றி கட்சியை வெற்றி பெற வைப்பார்கள். அல்லது பாஜவுடன்தான் கூட்டணி என்றாலும் வேண்டா வெறுப்பாக பிள்ளையை பெற்று காண்டா மிருகம் என்று பெயர் சூட்டிய கதையைப் போலவாவது வேலை செய்து கட்சி வெற்றிக்கு பாடுபடுவார்கள். இதை போல திரிசங்கு சொர்க்கத்தில், இரண்டான்கெட்டானாக அதிமுக தொண்டர்களை வைத்திருப்பது நியாயமில்லாத ஒன்று. எந்த முடிவாக இருந்தாலும் அதை வெளிப்படையாக தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். அதை விடுத்து தொண்டர்களின் உணர்வுகளோடு விளையாட கூடாது என்று தொண்டர்கள் அங்கலாய்க்கின்றனர். ஏற்கனவே அதிமுக தொண்டர்களின் உணர்வோடு விளையாடிய சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் தற்போதைய நிலைமையை எடப்பாடி பழனிசாமி உணரவேண்டும்.

அதேநிலை தனக்கும் ஏற்படக்கூடாது என்றால் அதிமுக தொண்டர்களின் உணர்வுகளோடு இதுபோல் விளையாட முயற்சிக்கக் கூடாது. இனியும் முயற்சித்தால் ஒரு நன்னாளில் அதிமுகவின் புதிய தலைமைக்கான தேடல் தொடங்கப் போகிறது என்பதற்கான பிள்ளையார் சுழியை எடப்பாடியே போட்டுவிட்டார் என்றுதான் நாங்கள் உணர்கிறோம் என்று கட்சியில் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். எல்லா விஷயத்திற்கும் சப்பைக்கட்டு கட்டி, வர்றவன் போறவனுக்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் அதிமுக தொண்டனுக்கு இல்லை. இதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைக்கும் 23 நிமிட வீடியோ பதிவேற்றுவதற்காக தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் இந்த சந்திப்பு எங்களை வெட்கி தலை குனிய வைக்கிறது. கடைசியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை போல அமித்ஷாவுடன் சந்திப்பு என்ற செய்தி எங்கள் நெஞ்சை ஈட்டியாய் குத்தி கிழித்திருக்கிறது. நடப்பதை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு எடப்பாடி உள்ளிட்ட இங்கு யாருக்கும் முட்டுக்கொடுக்க எங்களுக்கு உடன்பாடுமில்லை. மீண்டும் ஒருமுறை சொல்கிறோம் முள்ளை பிடித்தாலும் முழுவதுமாக பிடி. இந்த ஐ ஹேட் அண்ணாமலை ஐ லவ் பிஜேபி கான்சப்ட்டெல்லாம் அதிமுக தொண்டர்களிடம் ஒரு சதவீதம் கூட எடுபடாது என்கின்றனர் நிர்வாகிகள்.

The post எடப்பாடி-அமித்ஷா சந்திப்பால் அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்: திடமான கொள்கை இல்லாத தலைவர் என விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: