வேலூர்: கால்நடைகளுக்கு ஏற்படும் குடற்புழு தாக்குதலை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அழிப்பதன் மூலம் கால்நடைகள் நன்றாக வளர்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோடைக்காலங்களில் வயல்களில் புதிதாக துளிர்விடும் புற்களை மாடுகள் நேரடியாக மேய்வதால் குடல்புழு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அழிப்பதன் மூலம் கால்நடைகள் நன்றாக வளர்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கால்நடைகளை அதிகம் தாக்கும் நோய்களுள் ஒன்று குடற்புழு நோய். இவை மாடுகள் மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளையுமே தாக்கும்.
இருப்பினும், அதிகபட்சமாக பாதிக்கப்படுவது மாடுகள்தான். புழுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் வரை பாதிப்புகள் வெளிப்படையாக ஏற்படுத்துவதில்லை. குடல் புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் நோயின் பாதிப்பு அதிகரித்து காணப்படும். இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்நோய் இருக்கும் கால்நடைகளின் வயிற்றில் மிகுதியான வீக்கம் ஏற்படும். உடல் எடை குறைந்து எந்நேரத்திலும் சோர்ந்து காணப்படும். தாடையின் கீழ் பகுதியில் வீக்கம் காணப்படும். வயிற்றுப்போக்கு மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்படும். சில கால்நடைகள் பால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. கால்நடைகளின் கழிவுகளில் சிறு சிறு புழுக்கள் காணப்படும்.
குடற்புழு தாக்குதலை தடுக்க சாதாரண நாட்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், மழைக்காலத்தில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையும் கட்டாயம் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கத்துக்கு 6 வகையான தடுப்பூசி போடப்படுகின்றன. கன்றுகளுக்கு தொடர்ச்சியாக 6மாத காலமும், பின்னர் 3மாத இடைவெளியிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குறைந்த இடைவெளி நாட்களில் குடற்புழுநீக்கம் செய்வது அவசியம்.
குடற்புழு நீக்கம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
குடற்புழு நீக்கம் செய்வதால் கால்நடைகளுக்கு சினை உற்பத்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும், உணவு உட்கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது. உணவுகளில் உள்ள ஊட்டச்சத்தை முழுமையாக கால்நடைகளுக்கு கொண்டு சேர்க்கிறது. மாடுகளுக்கு பால் கறக்கும் அளவை அதிகரிக்கிறது. விவசாயிகள் தவறாமல் அட்டவணையிட்டு சுழற்சி முறையில் தொடர்ந்து குடற்புழு நீக்கம் செய்து கால்நடைகளின் பால் உற்பத்தி திறனையும், வளர்ச்சியையும் அதிகரிக்க செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க குடற்புழு நீக்குதல் அவசியம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.