சோழவந்தான் மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது இரும்பாடி சாலை விரிவாக்கப் பணிகள் ‘டாப் ஸ்பீடு’

*அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

சோழவந்தான் : சோழவந்தான் அருகே நீண்ட கால கோரிக்கையான குறுகலான இரும்பாடி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் கருப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

இவ்வூர்களின் வழியாக, மதுரை, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. அதிக பேருந்துகள் செல்லும் இச்சாலை பல வளைவுகளுடன் ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவு மிகக் குறுகலாக இருந்தது.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு கூட இச்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து பல பயணிகள் காயமடைந்தனர். அதற்கு முன் தனியார் பேருந்து தலை குப்புற கவிழ்ந்து அதிக பயணிகள் காயமடைந்தனர்.

இதே போல் டூவீலர்களில் வருபவர்களும் அடிக்கடி விபத்தில் சிக்கினர். இதனையடுத்து, பொதுமக்கள் இச்சாலையை விரிவுபடுத்தி தருமாறு அதிமுக ஆட்சியில் பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் கிராம புற சாலைகளும் நகர் பகுதி சாலைகள் போல் தரமாக மாறி வருகிறது. இதே போல் இரும்பாடி சாலையையும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதன்படி சிஆர்ஐடிபி 2024-25 திட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டிலான சாலை பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கின. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கருப்பட்டி ரயில் நிலைய சாலை மற்றும் மன்னாடிமங்கலம் புதிய பாலம் வழிச்சாலை ஆகிய மாற்றுப் பாதையில் பேருந்துகள் சென்று வருகின்றன.

சாலையோரத்தில் இருந்த சுமார் 6 அடி உயர பள்ளங்களை தடுப்புச் சுவருடன் மண் நிரப்பி, 3.75 மீட்டர் அகலம் இருந்த குறுகிய சாலை, 5.5 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது ஜல்லிக்கற்கள் நிரப்பி தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் கௌதம்,சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் முன்னிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஒரு வார காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து இச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்க உள்ளது. இரும்பாடி பிரிவு முதல் மன்னாடிமங்கலம் பாலம் சந்திப்பு சாலை வரையிலான, 2 கி.மீ தூர குறுகிய சாலை, தற்போது இரண்டு பேருந்துகள் செல்லும் அளவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மின் விளக்குகள் அமைக்க திட்ட அறிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலத்திலிருந்து வைகை ஆற்றுக்கு வடக்கு பக்கமுள்ள இரும்பாடி, கருப்பட்டி, கரட்டுபட்டி நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு சோழவந்தான் வழியாக 5 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியிருந்தது.

இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தரப்பில் ரூ.19.65 கோடியில் புதிதாக பாலம் கட்டப்பட்டு, அணுகுசாலையும் அமைக்கப்பட்டது.பாலம் கட்டப்பட்ட நிலையில், அதில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட பாலம் மற்றும் அணுகுசாலையில் மின்விளக்குகள் பொருத்த திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பக்கோரி பொதுப்பணித்துறையின் மின்னியல் பிரிவிற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், தற்போது வரை திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கப்படாததால் நெடுஞ்சாலைத்துறையால் மின்விளக்குகள் பொருத்த முடியவில்லை.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் மின்விளக்குகள் பொருத்துவற்தகான திட்ட மதிப்பீட்டை ஓரிரு வாரங்களுக்குள் தயாரித்து கொடுக்க வேண்டுமெனவும், அதை பெற்று நெடுஞ்சாலைத்துறையும் மின்விளக்குகளை விரைந்து பொருத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post சோழவந்தான் மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது இரும்பாடி சாலை விரிவாக்கப் பணிகள் ‘டாப் ஸ்பீடு’ appeared first on Dinakaran.

Related Stories: