பைக் சாகசம்: 5 இளைஞர்கள் சிக்கினர்

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 5 இளைஞர்கள் பைக்கில் சாகசம் செய்து ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவது, ஆபாச செய்கை செய்வது என்று அட்டூழியம் செய்து வந்தனர். இந்த கும்பல் ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வீடியோவை பார்த்த பலரும் கண்டித்தனர். இந்த விஷயம் களியக்காவிளை போலீசாரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து நேற்று களியக்காவிளைக்கு உட்பட்ட படந்தாலுமூடு சோதனை சாவடி அருகே ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்த 5 இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். உடனே 5 பேரையும் கைது செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், சஞ்சய் (21), ஜெபின் (21), நர்சிங் கல்லூரி மாணவர் ஜோயல் (21), மற்றும் 18 வயது கல்லூரி மாணவர், 17 வயது கல்லூரி மாணவர் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இளைஞர்கள் வந்த 2 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார் 5 பேரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கண்டித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் சாகசம்: 5 இளைஞர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: