விசாரணையில் அவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் (39), விநாயகம் (34), பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கிருஷ்ணகாந்த் (34), வடவள்ளியைச் சேர்ந்த பைனான்சியர் மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஐஸ் கிரீம் கடை நடத்தி வரும் ஆதர்ஸ் டால்ஸ்டாய் (24), நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த உணவு வணிகம் செய்து வரும் ரிதேஷ் லம்பா (41), திருச்சி ரோடு ரெயின்போ பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் ஏஜன்சி நடத்தி வரும் கிரிஷ் ரோகன் ஷெட்டி (30) ஆகியோர் என்பது தெரிவந்தது.
இதுதொடர்பாக ஆர்எஸ்புரம் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருட்கள், பணம் மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். எம்டிஎம்ஏ 24.40 கிராம், எம்டிஎம்ஏ பவுடர் 12.47 கிராம், கொகைன் 92.43 கிராம், கிரீன் கஞ்சா 1 கிலோ 620 கிராம், டிரை கஞ்சா 1 கிலோ 16 கிராம், குஷ் 1 கிலோ 680 கிராம், பீர் பாட்டில் 80, மது பாட்டில்கள் 42 மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று, டிஜிட்டல் எடை இயந்திரம் ஒன்று, 12 செல்போன்கள், பணம் 25 லட்சம், 3 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பல் போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை மூலம் புதிய வீடு, கார், நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். கார் டிரைவரும், கும்பலுக்கு தலைவனுமான மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கார் வாங்கி உள்ளார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கோவைப்புதூரில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வருவதாகவும், காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதியதாக வீடு மற்றும் வீட்டு மனை வாங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 12 வங்கிக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 7 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* மகனை பார்க்க வராத பெண் எஸ்ஐ
கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றபோது நிருபர்கள், போட்டோகிராபர்கள், கேமராமேன்கள் இருந்ததால் பெண் எஸ்ஐ மகன் மகாவிஷ்ணு தனது முகத்தை மறைத்து செல்ல போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கர்ச்சீப்பை கேட்டார். உடனே அவரும் தனது பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை கொடுத்து முகத்தை மறைத்து செல்ல உதவினார். மகன் கைது பற்றி அறிந்த பெண் எஸ்ஐ, ‘‘தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள், நான் போலீஸ் நிலையம் வரவில்லை’’ என்று கூறிவிட்டார்.
The post மகாராஷ்டிரா, இமாச்சலில் இருந்து கடத்தி வந்து கோவையில் உயர் ரக போதை பொருள் விற்ற பெண் எஸ்ஐ மகன் உட்பட 7 பேர் கைது: வீடு, கார், நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை அம்பலம் appeared first on Dinakaran.