திருமலை : திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்ணை அடித்து கொன்ற பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து ரங்காரெட்டி நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சரூர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருகந்தி அப்சரா(30). இவர் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.
இந்நிலையில், அப்சரா அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு சென்று வரும் போது வெங்கட சாய் கிருஷ்ணா(36) என்ற கோயில் பூசாரிக்கும், அப்சராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சாய் கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அப்சராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல அப்சரா திருமணத்திற்கு வற்புறுத்தவே சாய் கிருஷ்ணாவுக்கு அது பெரிய அழுத்தமாக மாறியது.
இதனால் அப்சராவை கொலை செய்ய சாய் கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் அப்சரா தனது நண்பர்களுடன் கோவை செல்ல காத்திருந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் விடுவதாக கூறி சாய் கிருஷ்ணா வீட்டில் இருந்து காரில் அழைத்து சென்றார்.
ஆனால் அப்சராவை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிக்கு சென்று அங்கு சரமாரியாக அடித்து கொலை செய்தார்.
அதன் பின்னர், காரில் அப்சராவின் சடலத்தை 2 நாட்கள் வைத்திருந்த சாய் கிருஷ்ணா பிறகு செப்டிக் டேங்க்கில் உடலை மறைத்துள்ளார். இதையடுத்து பெற்றோரிடம் அப்சராவை கோவைக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறி நாடகமாடினார். மேலும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
மேலும் சந்தேகம் வராமல் இருக்க சாய் கிருஷ்ணாவே போலீசில் புகார் அளிக்க, அப்சராவின் தாயாரை அழைத்துக் கொண்டு புகாரும் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். அதில், கடைசியாக அப்சரா சென்றது சாய் கிருஷ்ணா உடன் என்பதால் அவர் மீது சந்தேகம் அதிகமானது. அவரை பிடித்து போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தியதில் உண்ைம தெரியவந்தது.
இந்த வழக்கு சுமார் 2 ஆண்டுகளாக ரங்காரெட்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்சராவை கொலை செய்த பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு சுமார் ₹9.75 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம் பெண்ணை அடித்து கொன்ற பூசாரிக்கு ஆயுள் appeared first on Dinakaran.