மற்றொரு நபரான சல்மான் உசேன் இரானி என்பவரை ரயிலில் தப்பி சென்ற போது ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் போலீசார் ஆர்பிஎப் உதவியுடன் கைது செய்தனர். இந்த செயின் பறிப்பு சம்பவத்தை பிரபல கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானி தான் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். பிறகு வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்ய, தரமணி ரயில் நிலையம் அருகே போலீசார் அழைத்து வந்த போது, பைக்கில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போது, ஜாபர் குலாம் உசேன் இரானியை போலீசார் தற்பாதுகாப்புக்காக என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளியான மிசாம் மஜாதுஷ்ேமசம் இரானியை விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஓங்கோல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சல்மான் உசேன் இரானியிடம் தொடர் விசாரணை நடத்திய பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி வரும் 9ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதேபோல், என்கவுன்டர் செய்யப்பட்ட ஜாபர் குலாம் உசேன் உடல் பிரேத பரிசோதனை நீதிபதி முன்னிலையில் நடந்தது. இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மிசாம் மஜாதுஷ்மேசம் இரானி மற்றும் சல்மான் உசேன் இரானி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைதான 2 இரானி கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: செயின் பிறப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இரானி கொள்ளையர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தானே, அம்பிவெளி, கர்நாடகா மாநிலம் பிதரி பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் பூர்வீகம் இரான் நாடு. ஈராக் -இரான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின் போது, இரான் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான இரானியர்கள் அகதிகளாக அடை நாடுகளில் தஞ்சமடைந்தனர். இவர்கள் வங்கதேசம் நாட்டில் தஞ்சமடைந்து பிறகு கள்ளத்தனமாக இந்தியாவில் குடியேறியுள்ளனர். தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு குலத்தொழிலே மோசடி செய்வது, திருட்டு மற்றும் மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையடிப்பது தான். இதுதவிர இவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. சிறிய கூட்டமாக இருந்தாலும், ஒன்றுமையாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவார்கள். கொள்ளை சம்பவத்தில் ஒருவன் போலீசாரிடம் மாட்டிக்கொண்டால், மற்றவர்கள் குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு தெரிவிக்க மாட்டார்கள். இதுதான் இவர்களின் பலமாக உள்ளது. இவர்களுக்கு இந்தி, அரபி, உருது, பார்சி ஆகிய 4 மொழிகள் அத்துப்படி. இந்தியாவில் வடமாநிலங்களில் இந்தி மொழி அதிகளவில் பேசப்படுவதால் இரானி கொள்ளையர்களுக்கு வசதியாக உள்ளது.
இவர்கள் திருடுவது, பொதுமக்கள் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்களுக்கு இணை இவர்கள்தான். கொள்ளை சம்பவங்களில் இவர்கள் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு, போலீசாரிடம் சிக்காமல் திருடுவது எப்படி, பொதுமக்களின் கவனத்தை எப்படி திசை திருப்பி கொள்ளையடிப்பது, போலீசாரிடம் சிக்கினால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து பயிற்சி கொடுப்பார்களாம். இதற்காக இரானி கொள்ளை கும்பலை வழிநடத்தும் நபர் பயிற்சிக்கு தலைமை ஏற்று நடத்துவாராம்.
அந்த நபர், பல திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தற்போது வயது மூப்பு காரணமாக இளம் தலைமுறைக்கு தனது தொழில் நுணுக்கங்களை கற்று கொடுப்பார்களாம். கைது செய்ய வரும் போலீசாரை குழப்புவதற்காக தங்கள் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் திருட்டு, செயின் பறிப்பு தொழிலில் கை தேர்ந்தவர்களாகவும், வழிப்பறி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற வழிநடத்தும் தலைமை பண்பு வேண்டும் என்பதற்காக, இரானி கும்பலை சேர்ந்த மூத்த திருடர்கள் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார்கள். இந்த வகையில் தான் என்கவுன்டர் செய்யப்பட்ட ஜாபர் குலாம் உசேன் இரானி, மிசாம் மஜாதுஷ்மேசம் இரானி, சல்மான் உசேன் இரானி ஆகியோருக்கு மேற்கு தானே பகுதியில் கொள்ளை கும்பலை வழிநடத்திய நபர்களிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
அந்த பயிற்சியின் போது திருட்டு மற்றும் கொள்ளை குறித்து சிறப்பு வகுப்பு நடத்தப்படுமாம். அதற்கான செயல்விளக்கமும் மூத்த கொள்ளையர்கள், இளம் கொள்ளையர்களுக்கு அளிப்பார்களாம். அந்த பயிற்சியில், தங்கம் நடத்தும் நபர்களிடம், நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் என கூறி தங்கத்தை கொள்ளையடிப்பது எப்படி, முதியவர்களை திசை திருப்பு நகைகளை கொள்ளையடிப்பது எப்படி, அரசு உதவி தொகைகள் பெற்று தருவதாக கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பது எப்படி என பல மோசடிகள் குறித்து பயிற்சி அளிப்பார்கள். அந்த பயிற்சியில் வெற்றி பெற்ற வாலிபர்களை தான் அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு கொள்ளை சம்பவத்திற்கு தேர்வு செய்து வழிஅனுப்பி வைப்பார்களாம். அதன்படி தான், ஜாபர் குலாம் உசேன் இரானி தலைமையில் மிசாம் மஜாதுஷ்மேசம், சல்மான் உசேன் ஆகியோரை அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* ஒரு திருட்டில் கிடைக்கும் பணம் தீர்ந்தால் மட்டுமே அடுத்த திருட்டு
செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளியான மிசாம் மஜாதுஷ்மேசம் இரானியின் பெற்றோர் தற்போது திருட்டு வழக்கில் மும்பையில் சிறையில் உள்ளனர். மிசாம் மஜாதுஷ்மேசம் இரானி குடும்பம் திருட்டு தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. திருட்டு தொழிலில் கிடைக்கும் தங்கம், பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு திருட்டில் கிடைக்கும் பணம் தீர்ந்தால் தான் அடுத்த திருட்டு தொழிலுக்கு சொந்த கிராமத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு செல்வார்கள். அதுவரை அவர்கள் தங்களது சொந்த கிராமங்களில் விட்டு வெளியே வரமாட்டார்கள். அவர்கள் கிராமங்கள் அடர்ந்து காட்டு பகுதிக்கு இடையே உள்ளதால் போலீசாரும் அவர்கள் கிராமத்திற்கு அவ்வளவு எளிதில் செல்ல முடியாது.
அப்படி போலீசார் அவர்கள் கிராமத்திற்கு வந்தால், கிராமத்தை அடைவதற்கு 3 கிலோ மீட்டர் தொலையில் ஊர் எல்லையில் வெளியாட்கள் யாராவது கிராமத்திற்குள் வருகிறார்களா என்று தகவல் சொல்ல 24 மணி நேரமும் ஆட்கள் நியமித்துள்ளனர். இதனால் போலீசார் இவர்கள் கிராமத்திற்கு வந்தாலும், குற்றவாளிகள் தப்பி விடுவார்கள். அப்படியே குற்றவாளிகளை போலீசார் பிடித்துவிட்டால், அவர்களை கிராமத்தில் இருந்து வெளியே அழைத்து செல்வது மிகவும் கடினமானது. கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி போலீசாரை பணி செய்யவிடாமல் துரத்திவிடுவார்கள். இதனால் இரானி கொள்ளையர்கள் வசிக்கும் கிராமங்களில் போலீசார் செல்ல அச்சப்படுவார்கள். இவர்களும் ராம்ஜிநகர் கொள்ளை கூட்டமும் ஒன்று தான்.
* கொள்ளையில் மாற்றம்
சென்னையில் அடுத்தடுத்து நடந்த நகை கொள்ளையில் நல்வாய்ப்பாக இரானி கொள்ளையர்கள் 3 மணி நேரத்தில் கைது செய்துவிட்டோம். இவர்கள் இதற்கு முன்னர் வரை கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். பல இடங்களில் போலீஸ் என்று சொல்லி, அருகில் உள்ள தெருவில் கலவரம் நடக்கிறது என்று கூறி நகை அணிந்து செல்ல வேண்டாம் என்று நகையை வாங்கி ஒரு பேப்பரில் மடித்துக் கொடுப்பார்கள். வீட்டுக்குச் சென்று பாருங்கள் என்பார்கள். வீட்டுக்குச் சென்றால் நகை இருக்காது. இப்படித்தான் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். 2017ம் ஆண்டு வடசென்னையில் இதேபோல இரானி கொள்ளையர்களை, ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையிலான போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர்கள் கொள்ளையின் வடிவத்தை மாற்றிக் கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
* திருந்தி வாழ்வதாக போலீசை நம்ப வைக்க கூலிங் கிளாஸ் விற்பனை
செயின் பிறப்பு வழக்கில் 3வதாக கைது செய்யப்பட்ட சல்மான் உசேன் இரானிக்கு, தங்கை மட்டும் உள்ளார். பெற்றோர் கிடையாது. அவரது தங்கையை இவர் தான் படிக்க வைக்கிறார். சல்மான் உசேன் இரானி திருட்டு தொழிலை கைவிடுவதாக மும்பை போலீசாரிடம் ஓராண்டு பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். அதன் பிறகு சல்மான் உசேன் போலீசாரை நம்ப வைக்கும் வகையில் மும்பை தானே பகுதியில் சாலையோரம் ‘கூலிங் கிளாஸ், ஹெல்மெட்’ விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனால், போலீசார் இவர் திருந்திவிட்டதாக கருதியுள்ளனர்.
ஆனால் திடீர் திடீரென சல்மான் உசேன் இரானி மாயமாவார். இவர் மாயமாகும் போது, தனது சக இரானி கொள்ளையர்களுடன் பெருநகரங்களுக்கு சென்று கைவரிசை காட்டி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் கொள்ளையடிப்பதற்கு முன்பு, மூத்த திருடர்களுடன் கலந்து ஆலோசித்து எந்த நகரத்திற்கு செல்லலாம். இந்த திருட்டுக்கு யார் தலைமை வகிப்பது என்று முடிவு செய்வார்கள். அதன்படி தான் இவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற, மாறி மாறி அவர்களுக்குள் தலைமை வகிப்பார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றப்படி இவர்கள், மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பது, தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பின் தொடர்ந்து அவர்களை மடக்கி, சுங்கத்துறை, சிபிஐ, ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் என விதவிதமான பொய்களைச் சொல்லி நகைகளை பறிப்பார்கள். இதுபோன்ற மோசடி சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு இவர்களது சொந்த ஊரான அம்பிவெளி, பிதரிக்கு சென்று விடுவார்கள். போலீசார் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் கிராமங்களுக்கு சென்றால், இளம் பெண்களை பாலியல் தொந்தரவு செய்தாக கூறி அவர்கள் வழக்கறிஞர்களை வைத்து போலீசில் புகார் செய்து நெருக்கடி கொடுப்பார்கள். இதனால் அவர்கள் ஏரியாவுக்கு நகைகளுடன் இரானி கொள்ளையர்கள் சென்றுவிட்டால் கைது செய்வதும், நகைகளை மீட்பதும் கடினம்.
The post சென்னையில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்: சிக்காமல் திருடுவது எப்படி என முன்னாள் குழு தலைவர்கள் மூலம் சிறப்பு பயிற்சி appeared first on Dinakaran.