மான் வேட்டையை தடுத்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு: தொழிலாளி கைது

சின்னசேலம்: சின்னசேலம் அருகே மான் வேட்டையை தடுக்க சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அரசு ஆட்டுப்பண்ணையை ஒட்டிய பாக்கம்பாடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் 2 பேர் துப்பாக்கியுடன் சென்று மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை வனச்சரகத்தை சேர்ந்த வீ.கிருஷ்ணாபுரம் பீட் வனக்காப்பாளர் வேல்முருகன் (28) அப்பகுதிக்கு சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் ஒற்றை குழல் துப்பாக்கியை கொண்டு 2 பேர் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களை வேல்முருகன் பிடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது வேட்டையில் ஈடுபட்டவர்கள் சின்னசேலம் பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலு என்ற பாலகிருஷ்ணன் (45), குரால் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி செல்லக்கண்ணு (43) என்பதும், பைக்கில் மான்களை வேட்டையாட வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வனக்காப்பாளர் வேல்முருகன், செல்லக்கண்ணுவை பிடிக்க முயன்றபோது பாலகிருஷ்ணன் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வேல்முருகனின் வலது குதிங்காலில் சுட்டதோடு, துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். மற்ெறாருவரான செல்லக்கண்ணு என்னை பிடித்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அப்போது வேல்முருகன் உள்ளிட்ட ஊழியர்கள் செல்லக்கண்ணுவை சுற்றிவளைத்து பிடித்து 2 பேரும் வைத்திருந்த பைக், துப்பாக்கி மற்றும் ஹெட்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் சின்னசேலம் காவல் சரகத்திற்குட்பட்ட கீழ்குப்பம் காவல் நிலையத்தில் செல்லக்கண்ணு ஒப்படைக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் ரவி, அளித்த புகாரின்பேரில் அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது, துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து செல்லக்கண்ணுவை கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். இதனிடையே காயமடைந்த வேல்முருகன் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்தியாயினி சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு, வேல்முருகனிடம் உடல்நலம் விசாரித்தார்.

The post மான் வேட்டையை தடுத்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு: தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: