திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், “மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் காசி விஸ்வநாதர் சன்னதிக்கு தாங்கள் அளித்து இருக்கிற ரோப்கார் வசதி உரிய நிதி ஒதுக்கப்படாததால் அதனுடைய திட்டமே செயல்படாமல் உள்ளது. கிரிவலப் பாதை மேம்பாடு செய்ய அமையாமல் இருக்கிறது. ஏனைய திருச்செந்தூர், பழனியை போல் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாம் திருப்பரங்குன்றத்திற்கு சிறப்பு நிதி ஏதும் ஒதுக்க வேண்டும்.

அறநிலையத்துறையின் சார்பாக ஒரு மகளிர் கல்லூரியை அமைக்க வேண்டும் “ என்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: திருப்பரங்குன்றத்துக்கும் திருநீர்மலைக்கும் ரோப்கார் அமைக்க ரூ.26 கோடி அறிவிக்கப்பட்டது. தற்போது டிஜிட்டல் சர்வே, டிரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று 2 திருக்கோயில்களுக்கு ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி அதற்கு செலவாகும் என்று ரைட்ஸ் என்ற நிறுவனம் கருத்துரு அளித்திருக்கிறது.

முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் கூடுதல் நிதியை இந்த ஆண்டு விடுவிப்பதாக உத்திரவாதம் அளித்திருக்கின்றார். நிச்சயம் இந்த ஆண்டு அதற்குண்டான தொகை வழங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக அந்த பணிகள் தொடங்கப்படும். அதேபோல் 2012ம் ஆண்டு தான் நிறைவுற்ற குடமுழுக்கு தற்போது ரூ.2.5 கோடி செலவில் 16 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

14.7.2025ல் நடைபெறவுள்ள குடமுழுக்கில் நானும் அந்த மாவட்டத்தின் அமைச்சர் மூர்த்தி பங்கேற்க இருக்கின்றோம். சட்டப்பேரவை உறுப்பினரும் வந்து கலந்து கொண்டு குடமுழுக்கை சிறப்பாக நடத்திக் காட்டுவோம் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

The post திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: