சத்துணவு துறையில் 8,997 சமையலர்களை நியமிக்க அரசாணை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஜி.கே.மணி (பாமக) பேசுகையில், “ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள், உதவியாளர்கள் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, குழந்தைகளைப் பராமரிப்பது, அதையும் கடந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பது முதியோர்களை பாதுகாப்பது போன்ற பணிச் சுமைகள் அதிகமாக இருக்கின்றன.

அவர்களுக்கு இரண்டு, மூன்று மையங்களைப் பணியாற்றக்கூடிய காலியிடமாகவும் உள்ளது. அதில் ஊதிய உயர்வு வழங்குவது, பணி நிரந்தரம் போன்ற அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படுமா? சத்துணவு மையங்களிலே பணியாற்றக்கூடிய இடங்கள் மிகவும் காலியாக உள்ளது. அங்கேயும் இந்தப் பணிச்சுமை இருக்கிறது. இதை எல்லாம் நிறைவேற்றப்படுமா?. அவர்களுக்குப் பதவி உயர்வு, பணி நிரந்தரம் இவை எல்லாம் நிறைவேற்றப்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “7,900 அங்கன்வாடி குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் புதிய பணியாளர்கள் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 8,997 சத்துணவுத் துறையில் உள்ள சத்துணவு சமையலர்களை எடுப்பதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஒரு மாதத்திற்குள்ளாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேபோன்று, நீங்கள் கூறுவதுபோன்று அவருடைய கோரிக்கைகள் அரசு அவரிடம் அந்த சங்கத்தினரிடம் தொடர்ச்சியாகப் பேசி வருகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது, மற்ற கோரிக்கைகளைப் பொறுத்தவரைக்கும் அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.

The post சத்துணவு துறையில் 8,997 சமையலர்களை நியமிக்க அரசாணை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: