தொகுதி சீரமைப்பு குறித்த அடிப்படை புரிதல் எதுவும் அண்ணாமலைக்கு இல்லை: திருமாவளவன் பேட்டி

சென்னை: தொகுதி சீரமைப்பு குறித்து அண்ணாமலைக்கு அடிப்படை புரிதல் எதுவும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, நேற்று மதியம் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டை உருவாக்கியது பிரிட்டிஷார்தான் என, மகாராஷ்டிர ஆளுநர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதுபடி பார்த்தால், இந்தியாவே பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு தான்.

மதராஸ், கல்கத்தா, பாம்பே என்று சிதறி கிடந்த பகுதிகளை பிரிட்டிஷார் ஒருங்கிணைத்தனர். நாடு விடுதலை அடைந்த பின்பு, மற்ற சமஸ்தான பகுதிகளை பட்டேல், நேரு போன்றோர் ஒருங்கிணைத்தனர். இந்தியா என்ற ஒரு நாடு உருவாவதற்கு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான் காரணம். பாஜ தலைவர் அண்ணாமலைக்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து அடிப்படை புரிதல் எதுவும் இல்லை. அவருக்கு மறுசீரமைப்பு குறித்து புரிதல் ஏதாவது இருந்தால், நாம் சொல்லும் இந்த கருத்தை அவர் கட்டாயமாக வரவேற்று ஏற்றுக் கொள்வார்.

50 ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது மறு சீரமைப்பு செய்வதற்கான ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்புதான் அதை செய்ய முடியும். இப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் செய்தால், அதனால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதை திமுக மட்டும் கூறவில்லை. அனைத்து தரப்பிலும் அரசியல் கட்சி சார்பற்ற முறையில் கூறிவரும் கருத்து. இது அண்ணாமலைக்கு புரியவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

The post தொகுதி சீரமைப்பு குறித்த அடிப்படை புரிதல் எதுவும் அண்ணாமலைக்கு இல்லை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: