பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி அதிரடி கைது: கர்நாடக போலீஸ் நடவடிக்கை

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பியான சூரஜ் ரேவண்ணாவை கர்நாடகா போலீசார் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகனான சூரஜ் ரேவண்ணா மீது மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியின் பெண் தொண்டர் ஒருவர், ஹாசன் போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் புகார் அளித்தார். அதில், ‘சூரஜ் ரேவண்ணா தன்னுடைய பண்ணை வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அங்கு சென்றபோது, சூரஜ் ரேவண்ணா என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மேலும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு, அவர் அரசியல் ரீதியாக முன்னேறுவதற்கு தனக்கு உதவுவதாகவும் கூறினார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து சூரஜ் ரேவண்ணா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஹாசன் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக இருந்த சூரஜ் ரேவண்ணாவின் அண்ணன் பிரஜ்வால் ரேவண்ணா மீது பல பெண்கள் பாலியல் பலாத்கார புகார்கள் கூறினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த மே 31ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அதேபோல் சூரஜின் தாயார் பவானி ரேவண்ணா மீதும் பாலியல் மற்றும் கடத்தல் வழக்கு பதியப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார். தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறினார்.

 

The post பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி அதிரடி கைது: கர்நாடக போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: