தரமற்ற கட்டுமானத்தால் ரூ.17,840 கோடியில் கட்டப்பட்ட மும்பை கடல் பாலத்தில் விரிசல்: பிரதமர் திறந்து வைத்து 5 மாதங்களிலேயே சேதம்

மும்பை: மும்பையில் ரூ.17,840 கோடியில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட அடல் சேது கடல் பாலத்தில் முதல் மழைக்கே விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஷிவ்ரியில் இருந்து ராய்கட் மாவட்டத்தில் உள்ள நவசேவா வரையில் சுமார் 21.8 கி.மீ தூரத்துக்கு மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலம் கட்ட 2016 டிசம்பர் 24ம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ள 6 வழிப் பாலத்தின் 16.5 கி.மீ நீளம் கடலுக்கு மேல் பகுதியிலும், எஞ்சிய பகுதி நிலப்பரப்பிலும் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மூலம் மும்பையில் இருந்து ராய்கட்டிற்கு 20 நிமிடங்களில் சென்றடைய முடியும். இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் ஷிவ்ரி – நவ சேவா அடல் பாலம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையையும் இது பெற்றது. இந்தப் பாலத்தை தினமும் சுமார் 70,000 வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கி உள்ளது. முதல் மழைக்கே அடல் சேது கடல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் திறந்து வைக்கப்பட்டு 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில் விரிசல் ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலத்தில் காணப்பட்ட விரிசல் தொடர்பான படங்கள் இணையதளங்களில் வைரலாகின. அகோலா மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்ததும், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, விரிசல் ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். தரமற்ற கட்டுமானமே பாலத்தில் விரிசல் ஏற்பட காரணம் என்று அவர் தெரிவித்தார்.

The post தரமற்ற கட்டுமானத்தால் ரூ.17,840 கோடியில் கட்டப்பட்ட மும்பை கடல் பாலத்தில் விரிசல்: பிரதமர் திறந்து வைத்து 5 மாதங்களிலேயே சேதம் appeared first on Dinakaran.

Related Stories: