குமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

 

நாகர்கோவில், மே 6: தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தனசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சந்திரசேகர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் பேரூராட்சி துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிர்வாக நலன் கருதி, செயல் அலுவலர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் வெளியிட்டு, அனைத்து நிலைகளுக்கான செயல் அலுவலர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பேரூராட்சி துறையில் அரசுக்கு பண இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேரூராட்சி துறை சட்ட அலுவலர் பணியிடத்தை ரத்து செய்து, பேரூராட்சி துறை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். பேரூராட்சி துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நியாயமான உரிமையான வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் சிறப்பு ஊதிய உயர்வு ஆகியவைகளை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். பேரூராட்சி துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களின் ஓய்வூதியம் சம்பந்தமான கோப்புகளை தாமதமின்றி நிறைவேற்றி, ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

குமரி மாவட்ட பேரூராட்சியில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களின் 20 சதவிகித பதவி உயர்வு பட்டியல், தற்போது அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நிலுவையில் உள்ளதை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பேரூராட்சி துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களை, நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம்செய்யும் நடவடிக்கையை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post குமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: