மாந்தோப்பில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு

பேரணாம்பட்டு, மே 25: பேரணாம்பட்டு அருகே மாந்தோப்பில் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி, ரங்காம்பேட்டை, அரவாட்லா, பாஸ்மர்பெண்டா, டி.டி.மோட்டூர், சாரங்கள், பத்தலப்பல்லி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. எனவே, தண்ணீர் மற்றும் உணவு தேடி இந்த கிராமங்களுக்குள் நுழையும் யானை உட்பட வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள் கிராமத்தில் உள்ள மாந்ேதாப்பிற்குள் திடீரென நுழைந்த ஒற்றை யானை, மாங்காய்களை பறித்து சாப்பிட்டும், மா மரக்கிளைகளை உடைத்தும், நிலத்தில் இருந்த தண்ணீர் பைப்லைன்களை உடைத்தும் அட்டகாசம் செய்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி அப்பகுதி மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் ஒருமணி நேரம் போராடி அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தாடர்ந்து, நிலத்தில் சேதம் குறித்து வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் யானைகளை கணக்கெடுக்கும் பணியில் வன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை வனக்கோட்டத்தை சேர்ந்த
வனத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 2வது நாளாக நேற்றும் ஈடுபட்டனர். அதன்படி, எருக்கம்பட்டு, சாத்கர், பாலூர், அரவாட்லா உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நேரடி மற்றும் மறைமுக கணக்கெடுப்பு மூலம் யானைகளின் எண்ணிக்கை, யானைகள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம், யானைகள் வந்து போகும் வழித்தட மேலாண்மை, இருப்பிட மேலாண்மை ஆகியவற்றை இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post மாந்தோப்பில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: