அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம்: வேலூரில் பரபரப்பு

வேலூர், மே 25: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் காகிதப்பட்டறையில் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 30 பேர் வரை உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் விருத்தாச்சலத்தை சேர்ந்த 19 வயது வாலிபரும், கோவையை சேர்ந்த 20 வயது வாலிபரும் திடீரென பாதுகாப்பு இல்லத்தின் பின்பக்க சுவர் மீது தாவி ஏறி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் கணபதி கொடுத்த தகவலின்பேரில், டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தப்பிச் சென்ற 2 பேரையும் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் தேடி வருகின்றனர். மேலும் இல்லத்தில் உள்ள மற்ற இளம் குற்றவாளிகளிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தப்பி ஓடிய 2 பேரில் ஒருவர் ஏற்கனவே கடந்தாண்டு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்று மீட்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 2 பேர் தப்பி ஓட்டம்: வேலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: