டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர் ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு

குடியாத்தம், மே 25: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர், ஊழியர்களை தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபர் மனநல மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். குடியாத்தம் நகரில் உள்ள வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை வழக்கம்போல் நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக வந்தனர். அதேபோல், புறநோயாளிகள் பிரிவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். பின்னர், அவர் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இதை தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதே இடத்தில் கூச்சலிட்டபடி இருந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஜீவா நகர் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரியவந்தது. ஆனால், அவர் பெயர் மற்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார், அந்த நபரை மீட்டு வாலாஜாவில் உள்ள மனநல மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர் ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: