மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50வது ஆண்டு பொன்விழா கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மைசூரு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான ரேடிசன் ப்ளூ பிளாசாவில் இரவு தங்கினார். இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50வது ஆண்டு பொன் விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, விழாவில் பங்கேற்பதற்காக வந்து தங்கிய நட்சத்திர ஓட்டலில் வாடகை கட்டணம் ரூ.80 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலைஉயில் நட்சத்திர ஓட்டலின் பொது மேலாளர், கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரி பசவராஜுக்கு கடந்த 21ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எங்கள் ஓட்டல் சேவைகளைப் பயன்படுத்திய 12 மாதங்களுக்குப் பிறகும் அதற்கான கட்டண தொகை தற்போது வரையில் செலுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக கடிதம் மூலம் வலியுறுத்தியும் வருகிறோம். எனவே நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18சதவீதம் என்று தாமதமாக செலுத்தும் வட்டியாக மொத்தம் ரூ.12.09 லட்சத்தை சேர்த்து அசல் தொகையை தர வேண்டும்.

வரும் ஜூன் 1ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனிடையே இந்த ஓட்டல் நிலுவை தொகை குறித்து பதிலளித்துள்ள கர்நாடகா வனத்துறை,’இது ஒன்றிய அரசின் திட்டம் என்று கூறியதுடன், ஒன்றிய அரசு தான் பணம் தர வேண்டுமே தவிர, நாங்கள் இதில் தலையிட்டு எந்தவிதமான தொகையையும் கொடுக்க முடியாது’ என்று கைவிரித்து விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

The post மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: