விராலிமலை முருகன் கோயிலில் விசாக திருவிழா விடையாற்றியுடன் நிறைவு

விராலிமலை, மே 25: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன்கோயிலில் 11 நாட்களாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா நேற்று விடையாற்றியுடன் நிறைவடைந்தது. விராலிமலையில் மலைமேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுடைய விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசத் தேரோட்டம், கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் 10 ம் நாளான நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) மதுரை சாலையில் அமைந்துள்ள தெப்பகுளத்தில் தெப்பஉற்சவம் நடைபெற்றது. விழாவின் 11 ம் நாள் (நேற்று) விடையாற்றி நடத்தப்பட்டு விழா நிறைவடைந்தது. இதையொட்டி கேடயத்தில் எழுந்தருளிய முருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 11 நாட்களாக மலைக்கோயில் அடிவார மண்டபத்தில் இருந்த முருகன் விடையாற்றி நடத்தப்பட்டதை தொடர்ந்து மலைமேல் சென்று அமர்ந்தார். விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post விராலிமலை முருகன் கோயிலில் விசாக திருவிழா விடையாற்றியுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: