தேனி வீரபாண்டி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.13.04 லட்சம்

தேனி, ஏப். 27: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் முடிவில் ரொக்கமாக ரூ.13 லட்சத்து 4 ஆயிரத்து 350 கிடைத்தது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 8 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் தேனி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆண்டுமுழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இதனால் கோயில் வளாகத்தில் 14 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் மே மாதம் 7ம் தேதியில் துவங்கி மே 14ம் தேதி வரை நடைபெறஉள்ளது. திருவிழாவிற்கான கம்பம் நடுதல் விழா கடந்த ஏப்.17ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். மேலும், பக்தர்கள் நாள்தோறும் வந்து ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். வரும் மே 7ம் தேதி திருவிழா துவங்குவதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள 14 நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர்.

வீரபாண்டி சவுராஷ்ட்ரா கல்வியியல் கல்லூரி மாணவிகள் உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி முடிந்த நிலையில் உண்டியலில் ரூ.13 லட்சத்து 4 ஆயிரத்து 350 ரொக்கப்பணமும், 20 கிராம் தங்கமும், 237 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்காளர் பழனியப்பன் ஆகியோர் செய்தனர். தற்போது நிரந்தர உண்டியல்கள் எண்ணிக்கை முடிவடைந்ததையடுத்து சித்திரை திருவிழாவையொட்டி 14 நிரந்தர உண்டியல்களுடன் கூடுதலாக 22 தற்காலிக உண்டியல்களும் வைக்கப்பட உள்ளன என்பது குறிப்படத்தக்கது.

The post தேனி வீரபாண்டி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.13.04 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: