உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்த லாரி மோதியதில் மற்றொரு லாரி கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டை, டிச. 22: சென்னையில் இருந்து கோயம்புத்தூர் உக்கடம் பகுதிக்கு ஈச்சர் லாரி ஒன்று பந்தல் அமைக்கும் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றது. லாரியை சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த குணாளன் (65) என்பவர் ஓட்டி சென்றார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செரத்தனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஈச்சர் லாரியின் முன்பக்க டயர் வெடித்து தாறுமாறாக ஓடி முன்னால் ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து மதுரைக்கு 20 டன் ஆயில் கம்பெனிக்கு வெள்ளை சிப்ஸ் பவுடர் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மீது மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, சாலையின் தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டாரஸ் லாரி ஓட்டுனர் நாகசாமி காயம் அடைந்த நிலையில், லாரியில் இருந்த வெள்ளை சிப்ஸ் பவுடர் மூட்டைகள் சாலையில் கொட்டி சிதறியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார், விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: