ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.6.77 லட்சம் அபேஸ்: 3 பெண்கள் உள்பட 12 பேரிடம் ரூ.9.48 லட்சம் மோசடி

புதுச்சேரி, டிச. 22: புதுச்சேரியில் 3 பெண்கள் உள்பட 12 பேரிடம் ரூ.9.48 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் மட்டும் ரூ.6.77 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.  புதுச்சேரி பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஆண் நபரை டெலிகிராம் மூலமாக அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர், ஆன்லைன் டிரேடிங் முதலீட்டில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய நபர், ரூ.6.53 லட்சம் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அதேபோல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் போலி ஆன்லைன் டிரேடில் ரூ.17,667ஐ இழந்துள்ளார். வில்லியனூரை சேர்ந்த ஆண் நபரிடம், ஆன்லைன் டிரேடிங் ஆசைகாட்டி ரூ.7 ஆயிரம் பறித்துள்ளனர்.

கரிக்கலாம்பாக்கம் ஆண் நபர், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி கட்டணம் என மர்ம நபர் கூறி அவரிடம் ரூ.8,500ஐ அபேஸ் செய்துள்ளார். மூலகுளத்தை சேர்ந்த ஆண் நபர் லோன் ஆப் மூலம் கடன் பெற்று சரிவர செலுத்திய பிறகும், அவரை மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ.2,550ஐ மர்ம நபர் பறித்துள்ளார்.

உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் கையெழுத்து வேலை என்றும், சரிபார்ப்பு, ஜிஎஸ்டி கட்டணம் எனவும் கூறி ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர் அபேஸ் செய்துள்ளார். தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆண் நபரிடம், தனியார் வங்கி மேலாளர் போல் பேசி, கேஒய்சி அப்டேட் மற்றும் ஏபிகே பைல் அனுப்பியுள்ளனர். இதனை நம்பி கேஒய்சி அப்டேட் செய்துள்ளார். மேலும், ஏபிகே பைல் மூலம் வங்கி செயலியை இன்ஸ்டல் செய்துள்ளார்.

ஆனால் அவர், கடன் பெறாமலே ரூ.6.46 லட்சம் கடன் பெற்றதாகவும், அதிலிருந்து ரூ.85 ஆயிரத்தை வேறு கணக்கிற்கு மாற்றி மர்ம நபர் மோசடி செய்துள்ளார். சேலியமேடு பகுதியை சேர்ந்த பெண் நபரிடம் பழைய நாணயங்களை விற்பதாகக்கூறி ரூ.36 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரின் லேப்டாப் மூலமாக அவரது போட்டோ மற்றும் தனிப்பட்ட விவரங்களை கூறி மிரட்டி ரூ.1 லட்சத்தை மர்ம நபர் பறித்துள்ளார்.

பாகூரை சேர்ந்த ஆண் நபர், திருப்பதியில் தங்குவதற்காக ஓட்டல் அறைக்காக ஆன்லைனில் ரூ.8 ஆயிரத்துக்கு முன்பதிவு செய்து அனுப்பி ஏமாற்றப்பட்டார். அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண்ணிடம் மர்ம நபர் ரூ.1,700 மோசடி செய்துள்ளார். வெங்கட்டாநகரை சேர்ந்த ஆண் நபரிடம் ஓட்டல் முன்பதிவு கட்டணம் செலுத்தியதாக ஸ்கிரீன்ஷாட் அனுப்பி ரூ.9 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். ஆன்லைன் மோசடியில் 3 பெண்கள் உள்பட 12 பேர் ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் பணத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12 பேரும் அளித்த புகார்களின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: