வடலூர், டிச. 22: வடலூர் என்எல்சி ஆபீசர் நகரை சேர்ந்தவர் ரவணப்பன் மகன் லிங்குராமன்(49). வடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் கடையை 10 மணிக்கு மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 7 மணிக்கு கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் உள்ள வைத்திருந்த நல்லெண்ணெய், பவுடர், சோப், வாஷிங் மெஷின் லிக்யூட் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருகில் இருந்த ஊமத்துரை என்பவரின் பெட், பர்னிச்சர் மார்ட் கடையின் பூட்டை உடைத்தும் மர்ம நபர் உள்ளே சென்றுள்ளார். அங்கு பணம் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த மற்ற மளிகை கடை பூட்டை உடைத்து பண பெட்டியில் இருந்த 500 ரூபாயை திருடி சென்றுள்ளார்.
மேலும் சத்திய ஞான சபை அருகில் உள்ள ஒரு டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிக் கொண்டு இருந்த போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் திருடன் முகம் பதிவானது. இதைக் கண்ட திருடன் முகத்தை மூடிக் கொண்டு அங்கிருந்து ரூ.1500 பணத்தை திருடி சென்றான்.இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
