கடலூர், டிச. 22: கடலூர் சில்வர் பீச்சிற்கு நேற்று மாலை குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்த மக்கள் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். கடலூர் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், பொதுமக்களை கவரும் வகையில் திகழ்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் தற்பொழுது அதிகளவு சில்வர் பீச்சுக்கு வர துவங்கியுள்ளனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறைந்துள்ள நிலையில், மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால் பனிக்காற்று வீச துவங்கியுள்ளது.இதனால் காலை மாலை வேளைகளில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை நேரங்களில் 8 மணி வரை பனிப்பொழிவு அதிகளவு உள்ளது. அதேபோன்று மாலை 5 மணி முதல் குளிர் காற்று வீசுகிறது.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சில்வர் பீச்சுக்கு அதிகளவு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் வருகை தந்தனர்.
சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எந்தவித வயது வித்தியாசமும் இன்றி கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடலில் யாரும் இறங்கி குளிக்காமல், கால்களை மட்டும் நினைத்து விளையாடினர். மேலும், சில்வர் கடற்கரையில் அமைந்துள்ள நெய்தல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏராளமானோர் விளையாடி பொழுதை கழித்தனர்.
